ரயில் நிலையங்கள், வரலாற்ற சிறப்புமிக்க ஸ்தலங்களை வடிவமைக்க 162 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

ரயில் நிலையங்கள், வரலாற்ற சிறப்புமிக்க ஸ்தலங்களை வடிவமைக்க 162 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தெரிவு செய்யப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலங்கள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளை மென்மேலும் கவரும் வகையில் வடிவமைப்பதற்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த அபிவிருத்திப் பணிகளுக்காக 162 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி பண்டராவளை, நானு ஓயா ஆகிய ரயில் நிலையங்களும், மன்னார், கல்பிட்டி, மட்டக்களப்பு ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறைக்கான இடங்களாக சுற்றுலாத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 7 ரயில் நிலையங்களில் 5 ரயில் நிலையங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, உனவட்டுன, பென்தோட்டை, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய ரயில் நிலையங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை மற்றும் நானு ஓயா ஆகிய ரயில் நிலைய அபிவிருத்திப் பணிகள் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

புகையிரத நிலைய அபிவிருத்திப் பணிகளில் புகையிரத திணைக்களத்துடன் இணைந்து சுற்றலாத்துறை அமைச்சு செயற்படவுள்ளதுடன், இதற்காக 62 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மன்னார், மட்டக்களப்பு, கல்பிட்டி ஆகிய வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகளை புனர்நிர்மாணம் செய்யும் பணிகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாச்சார நிதியத்திலிருந்து உதவிகளை பெறவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad