சவுதி அரேபியா மீது கடும் நடவடிக்கை? நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 28, 2021

சவுதி அரேபியா மீது கடும் நடவடிக்கை? நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி இளவரசரின் ஒப்புதலோடு கொலை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதினார்.

அவர் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். ஜமால் கசோகி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு சென்றபோது அவர் கொடூரமாக உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இக்கொலைக்கு சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டார் என்று துருக்கி குற்றம் சாட்டியது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.

இந்த நிலையில் ஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி பட்டத்து இளவரசரின் ஒப்புதலோடுதான் இந்த கொலை நடந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில் ஜமால் சசோகி கொலையில் சவுதி இளவரசருக்கும் தொடர்பு இருப்பது பற்றி அமெரிக்க புலனாய்வுத்துறை வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா, விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

தற்போது சவுதி அரேபியா விவகாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்து உள்ளதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad