இலங்கைக்குள் விளையாடுவதைப் போன்று ஜெனிவாவில் அரசாங்கத்தால் விளையாட முடியாது - வேலுகுமார் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

இலங்கைக்குள் விளையாடுவதைப் போன்று ஜெனிவாவில் அரசாங்கத்தால் விளையாட முடியாது - வேலுகுமார் எம்.பி.

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்குள் விளையாடுவதைப் போன்று ஜெனிவாவில் அரசாங்கத்தால் விளையாட முடியாது. விளையாட்டுக்களின் மூலம் உள்நாட்டு மக்களை ஏமாற்றினாலும், சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது. எனவே நேர்மையாக செயற்பட வேண்டும். வெளிநாட்டு கொள்கைகளை முறையாக பேண வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர், வெளிநாடுகளுக்கு தேசிய சொத்துக்களை விற்பதற்கு நாம் ஒருபோதும் ஆதாரவளிக்க மாட்டோம். ஆனால் இராஜதந்திர தொடர்புகளை சுமூகமாக பேண வேண்டியது அத்தியாவசியமாகும். எனினும் அரசாங்கம் அதனை முறையாக பேணுவதாகத் தெரியவில்லை. ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடமும் அரசாங்கம் பின்பற்றும் வெளிநாட்டு கொள்கை என்ன என்று வினவுகின்றோம்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் ஜனாதிபதி கூறிய கருத்துக்களும் அதற்கு வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்புக்களும், விமல் வீரவின்சவின் செயற்பாடுகளும் அரசாங்கத்தின் ஸ்திரமற்ற செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. மறுபுறம் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைப்பதாகக் கூறிக்கொண்டு அதனை அதிகரித்துள்ளனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிக பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கத்திற்கு வெறும் 20 கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாதா? பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று கூறிய உடனேயே பெருந்தோட்ட கம்பனிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அரசாங்கமும் கம்பனிகளுடன் இணைந்தே செயற்படுகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இலங்கைக்குள் அரசாங்கம் எவ்வாறு வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் ஜெனிவாவிலும் அதே விளையாட்டை காண்பிக்க முடியாது. விளையாட்டுக்களின் மூலம் உள்நாட்டு மக்களை ஏமாற்றினாலும், சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது. எனவே நேர்மையாக செயற்பட வேண்டும். வெளிநாட்டு கொள்கைகளை முறையாக பேண வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad