ஏப்ரல் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை கோருவது போன்றே, வடக்கு கிழக்கு மக்களும் நியாயம் கோருகிறார்கள் - காவிந்த ஜயவர்தன - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

ஏப்ரல் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை கோருவது போன்றே, வடக்கு கிழக்கு மக்களும் நியாயம் கோருகிறார்கள் - காவிந்த ஜயவர்தன

(இராஜதுரை ஹஷான்)

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை நீக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கிறது. அனைத்து விடயங்களையும் அரசியல் கோணத்தில் கணிப்பதை அரசாங்கம் முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நியாயத்தை கோரி நிற்பதை போன்றே வடக்கு, கிழக்கு மக்கள் நியாயம் கோருகிறார்கள். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இனவாதம் மற்றும் வெறுப்பு பேச்சு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஒரு இனத்திற்கு மாத்திரம் அனைத்து விடயங்களில் முன்னுரிமை வழங்கும் போது தேவையற்ற பிரச்சினைகள் தோற்றம் பெறும். 

வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் அனைத்து இன மக்களையும் ஒன்றினைத்து அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் முன்னேறி செல்கிறது. இதனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும்.

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இன மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணித்து இனவாதத்தை தூண்டி அதனூடாக தனது இயலாமையினை மறைத்துக் கொள்கிறது. அரசாங்கம் இனவாதத்தை தூண்டி விடுகிறது என்பதை சிறந்த பெரும்பான்மையின மக்கள் நன்கு அறிவார்கள்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வீண் செலவுகளை ஏற்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நடத்தி செல்வது பயனற்றது என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை நீக்க முயற்சிக்கிறது. இது முற்றிலும் தவறான நோக்கமாகும்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தீர்வை காண முடியாது. தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad