இந்திய உயர்ஸ்தானிகருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது, திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் வெகுவிரைவில் இலங்கை வசமாக்கப்படும் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

இந்திய உயர்ஸ்தானிகருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது, திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் வெகுவிரைவில் இலங்கை வசமாக்கப்படும் - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

திருகோணமலையில் உள்ள எரிபொருள் தாங்கிகள் வெகுவிரைவில் இலங்கை வசமாக்கப்படும். இவ்விடயம் குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. எரிபொருள் தாங்கி குறித்து 2017 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொலன்னாவை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திருகோணமலை எரிபொருள் தாங்கி தொடர்பால் பல பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் அனைத்தும் வெகுவிரைவில் இலங்கை வசமாகும்.

எரிபொருள் தாங்கியை இலங்கை வசமாக்க தொழிற்சங்கத்தினர், அரசியல் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு ஒரு தீர்வு பொறிமுறை வகுக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் 2017 ஆம் ஆண்டு எண்ணெய் தாங்கி குறித்து செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை புறம்தள்ளி புதிய அணுகுமுறையினை கையாள்வதாக இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பிறகு முழுமையாக பயன்பெறாது போன திருகோணமலை எரிபொருள் தாங்கி 2003ஆம் ஆண்டு இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

பெறுமதி மிக்க இந்த தேசிய வளத்தை வெகுவிரைவில் சொந்தமாக்கிக் கொள்வோம் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

திருகோணமலை கடல்மார்க்கத்தின் ஊடாக செல்லும் கப்பல்கள் இந்தியாவுடன் தொடர்புப்பட்டுள்ளது. ஆகவே எரிபொருள் சார் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக அதிக தேசிய வருவாயை குறுகிய காலத்தில் ஈட்டிக் கொள்ள முடியும்.

85 வருட காலத்திற்கும் அதிகமான பழமை வாய்ந்த திருகோணமலை எண்ணெய் தாங்கியை அபிவிருத்தி செய்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த தேசிய வளத்தை சிறந்த முறையில் கையளிப்போம். என்பதை நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment