முக்கோண அரசியலும் : முஸ்லிம் அரசியலும் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

முக்கோண அரசியலும் : முஸ்லிம் அரசியலும்

(எம்.ஐ.லெப்பைத்தம்பி)

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மாற்றங்களை நோக்கி நகர்கின்ற போது சமூகங்களும் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டவும் மாற்றங்களை எதிர்கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும்.

இன்று உலக அரங்கில் அரசியல் மாற்றமென்பது தவிர்க்க முடியாதவொன்று என்பதுடன், மாற்றங்களை மக்களே நிகழ்த்திக்காட்டியுள்ளனர்.

உதாரணமாக, உலக வல்லரசாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க மக்களில் மனங்களில் மாற்றம் தேவைப்பட்டது. கொள்கை மாற்றங்களை ஏற்றுக் கொண்டனர்.

அமெரிக்கர்கள் புதிய உலகைக்காண ஆசைப்படுகிறார்கள். இன ஜெளன்யம் அவசியம் என்பதை உணர்த்தி நிற்கிறது. அண்மைய அமெரிக்க தேர்தல் பிரதிபலிப்புக்கள்.

அமெரிக்க புராணம் பாடுவதல்ல நோக்கம். உலக ஒழுங்கு மாற்றங்களைக்கண்டு வருகிறது என்ற யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு தான் ஆக வேண்டும்.

அந்த வகையில், மட்டக்களப்பும் பாரிய அரசியல் மாற்றத்தைக் கண்டது. முப்பெரும் அரசியல் ஜாம்பவான்களாக அவரவர் பிரதேசங்களிலும் அடுத்த பிரதேசங்களில் சுமாரான அபிவிருத்தியூடான செல்வாக்கிலும் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தை அலங்கரித்த காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடியைச் சேர்ந்த மூவரும் மாவட்ட அரசியலில் தூரப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தல் தோல்வி அவர்களது அரசியலை மெளனிக்கச் செய்துள்ளதுடன், மக்கள் மனங்களிலும் தூரப்படுத்தப்பட்டுள்ளதான தோற்றப்பாடு நிலவுவதாக எண்ணத் தோன்றுகிறது.

தோல்வி, தேசிய அரசியல் போக்கு, கொரோனா தாக்கம் போன்ற காரணிகள் அவர்களை சமூக அரசியலிலிருந்து தூரப்படுத்திவிட்டதா? என்ற கேள்வி என் போன்ற சாதாரண வாக்காளனிடம் இல்லாமலில்லை.

ஆகக்குறைந்தது பிரதேச ரீதியான பிரச்சினைகளில் தலையிடுவதை விட்டும் தூரமாக்கியுள்ளது. மக்கள் தேடும் நிலையும் உருவாகியுள்ளதுடன், தம் வெற்றிடத்தை மக்களுக்கு உணர்த்தும் இடைவேளையாக இருக்குமோ? என எண்ணாமலும் இருக்க முடியவில்லை.

பிரதேச ரீதியாக உரிமை சார்ந்து பல்வேறு பிரச்சினைகள் தொன்று தொட்டு இருந்து வரும் நிலையில், தாம் கோலோச்சிய காலத்திலேனும் சந்தர்ப்பங்களைச் சாதகமாக்கி காய் நகர்த்தி வென்று கொடுக்க முடியாமல், வெறும் அபிவிருத்தி அரசியல் மாயை மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தமை தற்போது விமர்சனப்பொருளாகியுள்ளதுடன், தங்களை எவ்வாறு காத்துக் கொள்வதென்ற முயற்சியிலும் அவர்களால் வெற்றி பெற முடிந்ததா? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

இவ்வாறான நிலையில், மாவட்டதில் தெரிவான ஒரேயொரு முஸ்லிம் பிரதிநிதியும் உறங்கு நிலை அரசியலைத் தொடர்வதை கடந்து செல்ல வேண்டிய நிலையில் மாவட்ட முஸ்லிம் மக்கள் இருக்கிறார் என்பது கவலை தரும் விடயமாகும்.

ஒட்டுமொத்த மாவட்ட முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதிநிதியான அவர், தன் மீது இம்மாவட்ட மக்கள் சுமத்திய பொறுப்பைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

மாவட்டத்தின் ஒட்டுமொத்த திட்டமிடல் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திலாவது கலந்து கொண்டு சமூகம் சார்ந்தசெயற்பாடுகளை முன்னெடுக்க, கிடைக்க வேண்டிய பங்கீடுகளைப் பெற்றுக் கொடுக்கவும் அவர் தவறி வருகிறார்.

பல்வேறு அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் முன்மொழியப்படுகின்றன. திட்டமிடப்படுகின்றன. செயற்படுத்தப்படுகின்றன.

கொரோனா அலையினால் முஸ்லிம் பிரதேசங்கள் காலவரையின்றி முடக்கப்பட்டு, தொழில், வருமான வழிகள் இஸ்தம்பித்துப்போன சூழலிலும் இப்பிரதேசத்தின் தலைவிதியை எவரோ தீர்மானிக்கும் நிலை இருந்தமை கவலையளிக்கிறது.

வாழைச்சேனை, காத்தான்குடி பிரதேசங்கள் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்ட போது, அவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் கூட காலதாமதத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

அன்றைய சூழலில் இடம்பெற்ற மாவட்டசார் அமர்வுகள், கூட்டங்களில் கூட முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் பேச ஆளில்லாத ஒரு வெற்றிடம் உங்களுக்காக வாக்களித்த மனங்களையும் உங்களை மாவட்ட முஸ்லிம்களின் ஏக பிரதியாக ஏற்றுக்கொண்ட முஸ்லிம்மக்களின் மனங்களையும் நெருடிச் செல்கின்றது.

கண் முன்னே நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்க நாதியற்றி நிற்கும் நீங்களா? திரைமறைவு சதிகளுக்குத் தீர்வு பெற்றுத்தர போகிறீர்கள்?

எம் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் முஸ்லிம்கள்சார் பிரச்சினைகள் தொடர்பிலான தரவுகள் வறுமை நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

எந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதியிடம் முஸ்லிம்கள் தொடர்பிலான, முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பிலான முறையான ஆவணங்கள் இல்லை என்பதுடன், பிரச்சினைகள் தொடர்பிலான அறிவென்பது தீர்வுகளை நோக்கி நகரும் நிலைக்குப் போதுமானதாக இல்லை.

இவ்வாறான நிலையில், மாவட்டத்தைப் பிரதிதித்துவம் செய்யும் சகோதர இன பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகள் எமக்கு கண் முன்னே தெரிகின்ற அதே வேளை, கடந்த காலங்களில் கதிரைகளைச் சூட்டாக்கிய முதியவர்களை வீட்டுக்கு அனுப்பி இளம் இரத்தங்களிடம் தமது பிரச்சினைகளை ஒப்படைத்துள்ளனர்.

வெவ்வேறு கட்சிகள், கொள்கைகள் அரசியலுக்குள் அவர்கள் நுழைந்திருந்தாலும் தம் இனத்தின் பிரச்சினை என்று வருகின்ற போது, ஒரே நேர்கோட்டில் சங்கமமாகும் தழிழ் அரசியல் எமக்கு நல்ல பாடங்களாகும்.

மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசுசார் ஒரு இராஜாங்க அமைச்சரும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் என, அபிவிருத்தி சார்ந்து ஒருவரும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஒருவரும் மும்முரமாக முழு நேர அரசியலை மேற்கொண்டு வரும் அதேநிலையில், கொள்கை அரசியலுக்கூடாக தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மொழிப்புலமை, பாரம்பரிய குடும்ப அரசியல்பின்னணி, தம் மண், தம் மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றிய ஆழ்ந்த அறிவு, தூரநோக்கு என தமிழ் அரசியலை, தமிழின பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தி சர்வதேச அரங்கில் பேசுபொருளாக்குவதனூடாக தீர்வுக்கான அழுத்தங்களை நோக்கிய நெடுந்தூர அரசியல் என மற்றொருவருமாக மூன்று மக்கள் பிரதிநிதிகளும் முக்கோண அரசியலை முன்கொண்டு வருவதை நாம் காண்கிறோம்.

இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ் அரசியல் சர்வதேச நாடாளுமன்றங்களில் எதிரொலிக்க தமிழ் மக்களால் தேர்வான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் காரணகர்த்தாக்கள் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

பாராளுமன்ற உறுப்புரிமையின் வலிமையை சகோதர இனத்தினர் உணர்ந்தளவுக்கு, பயன்படுத்திக் கொண்டளவுக்கு நம் சமூகம் பெறுமதி உணர்ந்து செயற்படத் தவறி விட்டோம் என்பதுடன், கடந்த காலத்தவறுகளில் பாடம் கற்றதாக இல்லை என்பதே உண்மை.

அதே நேரம், மூன்று தசாப்த கல்குடா முஸ்லிம் அரசியல் அபிவிருத்தி ரீதியாக ஓரளவு மாற்றம் கண்டாலும் உரிமைகள் ரீதியாக மேலதிகமாகப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் இருந்ததையாவது தக்க வைக்க முடியாமல் போனதுடன், இழந்ததையாவது பெற்றுக்கொள்ள முடியாமை துர்ப்பாக்கியமே.

முப்பதாண்டு கால கல்குடா முஸ்லிம் அரசியலில் பெற்றுக் கொண்டதை விட இழந்ததே அதிகம்.

கடல், வயல், பிரதேச எல்லை ரீதியான பிரச்சினைகளில் எந்தத்தீர்வையும் பெற்றதாக வரலாறு சொல்லப் போவதில்லை.

மாவட்ட நிருவாகச்சக்கரம் சகோதர இன அதிகாரப் பிடியில் சிக்குண்டுள்ள நிலையில், அரசியல் பின்னடைவும் கையாலாகாத முஸ்லிம் அரசியலும் விடிவைத்தரும் என்று இனிதும் நம்புவதில் பலனில்லை.

இழந்ததை பெறப்போய் இருப்பதை இழப்பதான நிலையே காணப்படுகின்றது.

அந்த நம்பிகையீனங்கள் தான் முஸ்லிம் இளைஞர்களின் மத்தியில் உணர்ச்சி அரசியலுக்கு முண்டு கொடுத்து, யதார்த்தங்கள், பின்னணிகள் குறித்த எந்தவொரு அறிவும், ஆய்வும் இல்லாமல் தமிழ் அரசியல் பிரதிநிதிகளை ஹீரோக்களாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட வைத்துள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது.

இதற்கு, தோல்விகளின் பின்னர் தூரப்பட்டுப் போன முஸ்லிம் அரசியலும் அடித்தளமிட்டுள்ளதாக உணர முடிகிறது.

எங்கோ ஒரு மூலையில் நாம் பலிக்கடாவாக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

தம் மக்களிடம் தம்மை தவறுகளை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு சில சகோதர தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்-தமிழ்ப்பிரதேசங்களை ஒப்பீடு செய்து, ஏதோ முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டு, செல்வச் செழிப்புடன் இருப்பதாக கதையளக்கின்றனர்.

இதன் யதார்த்தம் முஸ்லிம்கள் குறிப்பிட்டவொரு சிறியளவு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் சுருக்கப்பட்டுள்ளமையினால் செறிவாகக் காட்சி தருவதனால் அவ்வாறான பிரமை தோற்றமளிக்கிறதேயொழியே, நீங்கள் சிலாகிக்கும் அளவில் பாரிய அபிவிருத்திகளை அடைந்து விட்டதாகக்கொள்ள முடியாது.

சகோதர தமிழ் உறவுகள் பரந்த நிலப்பரப்பில் நெரிசல் இல்லாமல் வாழ்வதனால் அந்த தோற்றப்பாட்டை சிலாகிக்க முடியாமல் உள்ளதேயொழிய, நீங்கள் குறிப்பிடும் சோமலியா அளவில் தமிழ்ப்பிரதேசங்கள் இல்லை என்பதே யதார்த்தம்.

இதற்கு கடந்த காலங்களில் மாவட்டத்தில் அதிகாரத்திலிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தம்மாலான பங்களிப்பினை தமிழ்ப்பிரதேச அபிவிருத்தியில் வழங்கியுள்ளதனை மூடி மறைத்து விட முடியாது.

முக்கோண அரசியலால் முஸ்லிம் அரசியல் மூழ்கடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே ஆதங்கம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad