ஏப்ரல் குண்டுத் தாக்குதல் விசாரணை அறிக்கையினை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் - இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்படவில்லை பெயர் மாற்றத்துடன் நிறுவன ரீதியில் இன்றும் செயற்படுகிறார்கள் : ஞானசார தேரர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் விசாரணை அறிக்கையினை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் - இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்படவில்லை பெயர் மாற்றத்துடன் நிறுவன ரீதியில் இன்றும் செயற்படுகிறார்கள் : ஞானசார தேரர்

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தன்மையினை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்று கருதியே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையினை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். பொதுபலசேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தியின் உண்மைத் தன்மையினை தெரிந்து கொள்ளும் உரிமை எமக்குண்டு என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையினை ஜனாதிபதியிடம் மாத்திரம் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை பிரதமருக்கும், பாராளுமன்றத்துக்கும் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் அறிக்கை குறித்து சமூகத்தின் மத்தியில் மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை அறிந்துகொள்ள நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். அறிக்கையின் உண்மைத் தன்மையினை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தும் பொறுப்பு அரச தலைவருக்கு உண்டு. பாதுகாக்கப்பட வேண்டிய இரகசிய தகவல்களை தவிர்த்து ஏனையவற்றை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

பொதுபல சேனா அமைப்பை தடை செய்யப்பட வேண்டும் என்றும் எமக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஒரு ஊடகம் மாத்திரம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் குறித்து ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்.

பௌத்த உரிமையினையும், நாட்டின் இறையான்மையும் பாதுகாக்க பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளது. 2010 தொடக்கம் 2019 ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் இடம்பெறும் வரை இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து கருத்துரைத்தோம். நாம் குறிப்பிட்ட கருத்தை சிங்கள அரச தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் கருத்திற் கொள்ளவில்லை. மாறாக குறுகிய அரசியல் நோக்கிற்காக எம்மை இனவாதியாக விமர்சித்ததார்கள். இறுதியில் ஏப்ரல் 21 தாக்கத்துடன் அனைத்தும் உண்மை என வெளியானது.

பொதுபலசேனா அமைப்பினை தடை செய்யும் முயற்சியை முறியடிக்கும் அணுகுமுறையை நன்கு அறிவோம். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்படவில்லை. பெயர் மாற்றத்துடன் நிறுவன ரீதியில் இன்றும் அடிப்படைவாதிகள் செயற்படுகிறார்கள். இவ்விடயம் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad