பிரதமர் வழங்கிய வாக்குறுதி அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

பிரதமர் வழங்கிய வாக்குறுதி அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவ்விடயத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றால், அவரின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.

சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரசாங்கத்திற்குள்ளேயே இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுவது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரசியல்வாதிகள் கருத்துக்கூற முடியாது. மாறாக இவ்விடயத்தில் தேர்ச்சி பெற்ற விசேட நிபுணர்கள் அபிப்பிராயத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும். எனினும் அதனைச் செய்வதில் அரசாங்கம் ஏன் தொடர்ந்தும் தயக்கம் காட்டுகிறது என்ற சந்தேகம் பொதுமக்களிடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர், அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார். எனினும் இவ்விடயத்தில் விசேட நிபுணர்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அவ்வாறெனின், சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பிரதமரால் வெளியிடப்பட்ட கருத்து பொறுப்பற்ற தன்மையைப் புலப்படுத்துகின்றதா? இவ்விடயத்தில் பிரதமரின் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாதெனின், அவரால் வெளியிடப்பட்ட கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment