ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பெரும்பான்மை மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு, அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்காவிடின் அரசாங்கம் பலவீனமடையும் - ஞானசார தேரர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பெரும்பான்மை மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு, அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்காவிடின் அரசாங்கம் பலவீனமடையும் - ஞானசார தேரர்

(இராஜதுரை ஹஷான்)

நீதியமைச்சர் அலி சப்ரி நாட்டு தலைவர் அல்ல இவர் வரையறைகளுக்குட்பட்டு செயற்பட வேண்டும். பௌத்த மத உரிமை சட்டங்களில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பெரும்பான்மை மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. நீதியமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது நீதியமைச்சர் பதவியில் இருந்து இவரை நீக்க வேண்டும். இல்லாவிடின் இவராலேயே இந்த அரசாங்கம் பலவீனமடையும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பௌத்த மத கல்வி எவ்விடத்திலும் அடிப்படைவாதத்தையும், பிற மதங்களை அழிக்க வேண்டும் என்றும் போதிக்கவில்லை. பௌத்த மத கொள்கையினை கொண்டுள்ள நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்கவில்லை. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் கிடையாது. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளது.

மத்ரஸா பாடசாலை, காதி நீதிமன்றம், ஷரியா சட்டம் ஆகியவை நாட்டுக்கு பொறுத்தமற்றது என்பதை பல முறை குறிப்பிட்டுள்ளோம். மத்ரஷா பாடசாலை, ஷரியா சட்டம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதித்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையினை செயற்படுத்த வேண்டுமாயின் மேலைத்தேய சட்டம், தேச வழமை சட்டம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்ரியின் வாதம் தேவையற்றதாகும். பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பௌத்த மத சட்டங்களும், பௌத்த கல்வியும் நாட்டில் பௌத்த அடிப்படைவாதத்தையும், வன்முறைகளையும் தூண்டவில்லை. ஆனால் மத்ரஸா பாடசாலை, ஷரியா சட்டம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கிறது. அதற்கு பல ஆதாரங்கள் உண்டு. முஸ்லிம் விவாக சட்டத்தில் ஒரு தரப்பினரது உரிமை மீறப்படுகிறது. இது பொது சட்டத்திற்கு புறம்பானது.

பௌத்த மத உரிமை பாதுகாக்கும் சட்டங்களை நீக்க பெரும்பாலான மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவே பெரும்பான்மையின மக்கள் தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆகவே நீதியமைச்சர் அலி சப்ரி நாட்டின் தலைவர் என்று நினைத்துக் கொண்டு கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நீதியமைச்சரது கருத்துக்கள் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது. ஆகவே இவரது செயற்பாடு குறித்து ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். நீதியமைச்சர் பதவியில் இருந்து இவரை விலக்குவது சிறந்ததாகும். இல்லாவிடின் இவரால் வெகுவிரைவில் அரசாங்கம் பலவீனமடையும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad