சவுதி சிறையிலிருந்த பிரபல பெண்கள் உரிமை ஆர்வலர் விடுதலை - அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா பொதுச் செயலாளர் வரவேற்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

சவுதி சிறையிலிருந்த பிரபல பெண்கள் உரிமை ஆர்வலர் விடுதலை - அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா பொதுச் செயலாளர் வரவேற்பு

பெண்கள் உரிமை ஆர்வலரான லூஜெய்ன் அல்-ஹத்லூல் சவுதி அரேபிய சிறைச்சாலையில் இருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலரான லூஜெய்ன் அல்-ஹத்லூல் (Loujain al-Hathloul) பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2018 மே மாதம் கைது செய்யப்பட்டார்.

ரியாத்தின் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்திற்கு (சிறப்பு குற்றவியல் நீதிமன்றம்) மாற்றப்பட்டது.

அந்நீதிமன்றத்தில் ஹத்லூலுக்கு 5 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களுக்கு பிறகு சவுதி அரேபிய சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஹத்லூலிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் பயணம் செய்ய தடை தற்போதும் அமுலில் உள்ளது.

“லூஜெய்ன் வீட்டில் இருக்கிறார்.” என அவரது சகோதரி லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மற்றொரு சகோதரி, ஆலியா, ஹாத்லூல் சவுதி அரேபியாவில் உள்ள அவர்களது பெற்றோரின் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

பெண்களின் வாகனம் ஓட்டுவதற்கும், சவுதியின் ஆண் பாதுகாப்பு முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பிரச்சாரம் செய்த ஹத்லூல், மின்சார அதிர்ச்சிகள், தண்ணீரில் மூழ்க வைத்து சித்திரவதை, தடியடி மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட துஷ்பிரயோகங்களுக்கு ஆளானதாக உரிமைக் குழுக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை சவுதி அதிகாரிகள் மறுத்துள்ளனர். சவுதி மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லாததைக் காரணம் காட்டி, சித்திரவதை கோரிக்கைகளை தள்ளுபடி செய்துள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது சித்திரவதைக்குள்ளாவதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், பயணத் தடை போன்ற எந்த விதமான தண்டனை நடவடிக்கைகளையும் ஹத்லூல் எதிர்கொள்ளாமல் இருக்கவும் வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை புதன்கிழமை ரியாத்தை வலியுறுத்தியுள்ளது.

ஹத்லூல் மீதான தண்டனை குறித்து சவுதி அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் விடுதலை குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட சவுதி அரேபியாவுடன் உறுதியான போக்கை கொண்டிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன், அரசியல் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட ரியாத் தனது மனித உரிமை பதிவை மேம்படுத்தும் என எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"அவளை விடுவிப்பது சரியான செயலாகும்" என பைடன் ஹத்லூலைப் பற்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுவிக்கப்பட்டதை ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வரவேற்றார் என செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

"ஆனால் அவளைப் போலவே அதே நிலையில் இருக்கும் மற்றவர்களும், அதே காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களும் விடுவிக்கப்படுவது முக்கியம் என்றும், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்" என அவர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad