பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஜே.வி.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஜே.வி.பி

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான பிரச்சினை இன்னும் தீரவில்லை.

ஆயிரம் ரூபா என்ற கோரிக்கை 6 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். அதனை வலியுறுத்தி தொழிலாளர்களுடன் இணைந்து நாமும் போராடினோம்.

6 வருடங்களுக்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைக்கேற்பவே அந்த தொகை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

எனவே, கிடைக்கவுள்ள ஆயிரம் ரூபா போதாது என்பதையும் கூறியாக வேண்டும். சம்பள நிர்ணய சபையில் எமது அங்கத்தவர்கள் இருவர் அங்கம் வகிக்கின்றனர். சம்பள உயர்வுக்காக அவர்களும் குரல் கொடுத்தனர்.

சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தம் ஊடாக கிடைக்கப் பெறும் சலுகைகள் கிடைக்கப் பெறுமா என்ற கேள்வியும் எழுகின்றது. அவ்வாறு இல்லாது செய்யப்பட்டால் அவற்றை பெறுவதற்காக நாம் போராடுவோம். தொழிலாளர்களின் உரிமைக்காக நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

மலையக மண்ணை பெருந்தோட்டத் தொழிலாளர்களே வளமாக்கினர். அவர்கள் சிந்திய வியர்வை மண்ணில் கலந்துள்ளது. அந்நிய செலவாணியை பெற்றுக் கொடுக்கின்றனர். ஆனாலும் பெருந்தோட்ட மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

வாழ்வாதாரம் உரிய வகையில் மேம்படவில்லை. மனிதர்களாக வாழ்வதற்கான தேவைகளை இந்த நாட்டை ஆண்ட அரசுகள் செய்துகொடுக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம்கூட இல்லை. பலர் இன்னும் லயன் அறைகளில்தான் வாழ்கின்றனர்.

அனைத்து வளங்களையும்கொண்ட பாடசாலைகள் இல்லை. இப்படி பல பிரச்சினைகளை பட்டியலிடலாம். உரிமைகள் மற்றும் சகல அந்தஸ்த்துக்களுடனும் பெருந்தோட்ட மக்களும் வாழ வேண்டும். இந்நிலைமையை பெற்றுக் கொடுப்பதற்கு மலையக தலைவர்கள் என கூறிக் கொள்பவர்கள் நடவடிக்கை எடுத்ததில்லை." - என்றார்.

No comments:

Post a Comment