ரயில் நிலையத்தில் அமைச்சரை தீர்த்துக்கட்ட முயற்சி - பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

ரயில் நிலையத்தில் அமைச்சரை தீர்த்துக்கட்ட முயற்சி - பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் வரவுள்ளது. இதனால் அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைக்கும் பஞ்சம் இல்லை.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவரை ரயில் நிலையத்திற்குள் வைத்து வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாகீர் உசைன் நேற்று இரவு முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையம் சென்றார். 

தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் வேகமாக நடந்து சென்றார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

குண்டுகள் வெடித்து சிதறியதில் அமைச்சர் ஜாகீர் உசைன் மற்றும் சிலர் பலத்த காயமடைந்தனர். அமைச்சருக்கு ஒரு கை மற்றும் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பின்னர் அமைச்சர் ஜாகீர் உசைன் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மீதான தாக்குதலுக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் ரயில் நிலைய வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment