குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு - சம்மாந்துறையில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 21, 2021

குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு - சம்மாந்துறையில் சம்பவம்

(ஐ.எல்.எம் நாசிம், எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் 12 பவுண் தங்க நகையை தன்னையரியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார்.

அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், குறித்த வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய வேளையில் காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டதை தொடர்ந்து, இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக் கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை தொடாந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் பணிபுரைக்கமைவாக உடனடியாக செயற்பட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக் கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக் குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, குறித்த நபரின் 12 பவுண் தங்க நகை தேடிக்கண்டு பிடித்து உரிய நபரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் சம்மாந்துறை பிரதேச சபைக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்தமைக்காகவும் கழிவுக் குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து தங்க நகை தேடிக் கண்டுபிடித்தமைக்கு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் குறித்த மேற்பார்வையாளர், சுகாதார ஊழியர்கள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி நிலைய ஊழியர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இவ்வாறாக நகை, பணம், பெறுமதியான பொருட்கள் உரிமையார்களை அறியாமல் குப்பைகளுக்குள் வீசப்பட்ட பொருட்கள் உரிமையாளிடம் ஒப்படைந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad