இலங்கையின் செயற்பாடு ஏமாற்றமளிக்கிறது - அமெரிக்கா - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

இலங்கையின் செயற்பாடு ஏமாற்றமளிக்கிறது - அமெரிக்கா

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அறிவித்த இலங்கை, அதிலிருந்து பின்வாங்கியமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் இன்று (வியாழக்கிழமை) தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவிற்கு கொண்டுவருவதிலிருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து அவர்களின் உரிமைகளுக்கான மேலும் கௌரவம் வழங்கப்படவேண்டும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பாராளுமன்றத்தில் முன்னர் அளித்த வாக்குறுதியை அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

அடக்கம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சின் நிபுணர் குழு முடிவு செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ளே பாராளுமன்றத்திற்கு தெரிவித்த பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இலங்கையில் அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்த ஒரு நாள் கழித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ளே இந்த அறிவிப்பினை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad