பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது வட கொரியா - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பித்தது நிபுணர்கள் குழு - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது வட கொரியா - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பித்தது நிபுணர்கள் குழு

பொருளாதார தடைகளை மீறி வட கொரியா அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி இருக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் நிபுணர்கள் குழு பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது.

ஐ.நா. சபையின் விதிகளையும், சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வந்தது.

குறிப்பாக 2006ம் ஆண்டு அந்த நாடு முதன்முதலாக நடத்திய அணு குண்டு சோதனையும், தொடர்ந்து நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளும் உலக அரங்கை உலுக்கின. 

அந்த நாட்டின் மீது ஐ.நா சபையும், அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை அந்த நாடு நடத்தி வந்தது.

இந்த நிலையில் வட கொரியா பற்றிய அறிக்கை ஒன்றை ஐ.நா. சபையின் நிபுணர்கள் குழு அளித்துள்ளது.

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல், கடுமையான பொருளாதார தடைகளை மீறி, வட கொரியா தனது அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நவீனமாயக்கி இருக்கிறது என்பதுதான்.

இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இவை

குறுகிய, நடுத்தர தூர ஏவுகணைகளையும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவி கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்த ஏவுகணைகளையும் வட கொரியா தனது ராணுவ அணிவகுப்புகளில் காட்டி உள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய அணு ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்வதற்கும், தந்திர அணு ஆயுதங்களை மேம்படுத்துவதற்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.

வட கொரியா தனது அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை உருவாக்கி, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்கிறது. சர்வதேச வங்கி அமைப்புகளை நாடுகிறது. தீங்கு இழைக்கும் இணைய நடவடிக்கைளை மேற்கொள்கிறது. இப்படியாக பொருளாதார தடைகளை அந்த நாட்டால் தப்பிக்க முடிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதிக்கும், செப்டம்பர் 30ம் திகதிக்கும் இடையே ஐ.நா. சபையின் உச்சவரம்பை மீறி (உச்சவரம்பு ஆண்டுக்கு 5 லட்சம் பீப்பாய்கள்) அடையாளம் தெரியாத நாட்டிடம் இருந்து பலமுறை பெட்ரோலிய பொருட்களை வட கொரியா பெற்றுள்ளது என்பதற்கான படங்கள், தரவுகள், கணக்கீடுகள் இந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன.

வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழு கூட்டம், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் நடந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad