பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி சிங்களவர்களுக்கு எதிரானதல்ல - இனவாத அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்களால் எவ்வாறு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் : பிமல் ரத்நாயக்க - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி சிங்களவர்களுக்கு எதிரானதல்ல - இனவாத அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்களால் எவ்வாறு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் : பிமல் ரத்நாயக்க

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் அடக்கு முறைகளால் அதிருப்தியடைந்த தமிழ் மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணியாகும். எனினும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்கள், பேரணியில் கலந்துகொண்டவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகவே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி அமைந்திருக்கிறது.

குறிப்பாக கடந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் அடக்கு முறைகள், அழுத்தங்களுக்கு எதிரான கிளர்ச்சியே அந்தப் பேரணியாகும்.

ஏனென்றால் குறித்த பேரணி பொத்துவில் நகரில் ஆரம்பமானபோது, சுமார் 20 பேர் மாத்திரமே இருந்தார்கள். எனினும் அது நிறைவடையும்போது பெருமளவான மக்கள் திரண்டு பேரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

சரத் வீரசேகர உள்ளடங்கலாக தெற்கிலுள்ள அநேகமானோர் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படுவோரின் படங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று அண்மையில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

உண்மையில் குற்றவாளிகளுக்குத் தண்டனைக் காலம் நிர்ணயிக்கப்படுவதற்கான காரணம், அக்காலப்பகுதியில் அவர்கள் தமது தவறை உணர்ந்து திருந்தி வாழ வேண்டும் என்பதற்காகவேயாகும்.

எனினும் அதனைப் புரிந்து கொள்ளாமல் குற்றவாளிகளின் புகைப்படங்களைப் பகிரங்கப்படுத்துவதாகக் கூறும் ஒருவரால், போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் உணர்வுகளை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்?

பொத்துவில் - பொலிகண்டி பேரணி என்பது சிங்களவர்களுக்கு எதிரானதல்ல. மாறாக அது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் அரசாங்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக வடக்கிலும், தெற்கிலும் தனித்தனியாகப் பாரிய போராட்டங்கள் இடம்பெற்ற போதிலும் அவை தோல்வியில் முடிந்தன.

எனவே, இனியேனும் வடக்கும், தெற்கும் பிளவுபட்டு போராடாமல், அரசாங்கத்தின் அடக்கு முறைகள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிராக ஒருமித்துப் போராட வேண்டியது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad