புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தைக் கோருகின்றனர், முதலில் நாட்டுக்கு வந்து குடியுரிமையைப் பெற்று, இங்குள்ள மக்களுடன் இணைந்து வாழட்டும் - பூகோள இலங்கையர் பேரவை - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தைக் கோருகின்றனர், முதலில் நாட்டுக்கு வந்து குடியுரிமையைப் பெற்று, இங்குள்ள மக்களுடன் இணைந்து வாழட்டும் - பூகோள இலங்கையர் பேரவை

(நா.தனுஜா)

ஜெனிவா கூட்டத் தொடரில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய யோசனையொன்றை முன்வைக்கவுள்ளன. இவையனைத்தும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் (டயஸ்போரா) தேவைகளுக்கு அமைவாகவே நடைபெறுகின்றது. அவர்கள் எமது நாட்டிற்குள்ளேயே ஈழத்தைக் கோருகின்றார்கள். அவ்வாறெனின் அவர்கள் முதலில் இலங்கைக்கு வந்து இந்நாட்டு குடியுரிமையைப் பெற்று, இங்குள்ள மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பூகோள இலங்கையர் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷியாமேந்திர விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பது ஒரு சர்வதேச அமைப்பு என்றாலும் கூட, நாடுகளின் சுயாதீனத் தன்மையில் தலையீடு செய்வதற்கோ அல்லது நாடுகளைத் தண்டிப்பதற்கோ அதற்கு அதிகாரம் இல்லை.

கடந்த காலத்தில் புலம்பெயர்ந்து சர்வதேச நாடுகளில் வாழும் டயஸ்போரா அமைப்புக்களின் தேவைக்கேற்ப, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமது நாட்டிற்கு எதிராகப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அதற்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் இணையனுரசணை வழங்கியது. அதனூடாக நாட்டில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவே சர்வதேச சமூகம் கருதியது.

அவ்வாறிருக்கையில் தற்போதைய அரசாங்கம் அந்தத் தீர்மானத்திலிருந்து சடுதியாக விலகியதை, பொறுப்புக் கூறலில் இருந்து விலகியதாகவே சர்வதேச நாடுகள் புரிந்துகொண்டுள்ளன.

அதுமாத்திரமன்றி, போர்க் குற்றங்கள் தொடர்பாக கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட குழுக்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதியினால் புதிதாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையின் பின்னர் அந்தக் குழு நியமிக்கப்பட்டமையும், எதிர்மறையாக கருத்துக்கள் முன்வைக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளன.

இந்நிலையில், இம்முறை நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடரில் பிரிட்டன் தலைமையில் சில நாடுகளால் இலங்கை தொடர்பில் புதிய யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

இவையும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் (டயஸ்போரா) தேவைக்கு அமைவாகவே நடைபெறுகின்றது. அவர்கள் எமது நாட்டிற்குள்ளேயே ஈழத்தைக் கோருகின்றார்கள். அவ்வாறெனின் அவர்கள் முதலில் இலங்கைக்கு வந்து இந்நாட்டு குடியுரிமையைப் பெற்று, இங்குள்ள மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad