நீங்கள் இலங்கை அரசாங்கத்தின் பிரதமராக எடுத்த தீர்மானத்தை மறைக்க இடமளிக்காது, வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுப்பீர்களென எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் - மஹிந்தவுக்கு கடிதம் எழுதினார் மரிக்கார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

நீங்கள் இலங்கை அரசாங்கத்தின் பிரதமராக எடுத்த தீர்மானத்தை மறைக்க இடமளிக்காது, வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுப்பீர்களென எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் - மஹிந்தவுக்கு கடிதம் எழுதினார் மரிக்கார் எம்.பி.

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக விஞ்ஞான அடிப்படையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் மற்றும் அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த தீர்மானத்தை செயற்படுத்த தேவையான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணாந்துபுள்ளே 2021 பெப்ரவரி 9ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் நீரில் பரவுவதில்லை என பொறுப்புடன் தெரிவித்திருந்தார்.

மறுநாள் பாராளுமன்ற அமர்வின்போது, ராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்த பிரகாரம் கொரோனா வைரஸ் நீரில் பரவும் ஆபத்து இல்லை என்றால், கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக நான் உங்களிடம் வினவியபோது, கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்தமைக்கு ஆரம்பமாக நன்றி தெரிவிக்கின்றேன்.

கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பாக தீர்மானிக்க சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட வைரஸ் தொடர்பான விசேட வைத்தியர் நிபுணர்கள் அடங்கிய குழு, கடந்த டிசம்பர் 28ஆம் திகதி அதன் அறிக்கையை சுகாதார அமைச்சுக்கு கையளித்திருக்கின்றது.

அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குறித்த குழுவின் தலைவி பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தொலைக்காட்சி ஒன்றினூடாக தெளிவுபடுத்தி இருந்தார். இந்த குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்கமைய, கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருக்கின்றது.

அதன் பிரகாரம் சிங்களவர்களின் கொராேனா மரணத்துக்கு அவர்களின் மத அடிப்படையிலான பாஸ்க்கு கூல பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி இருப்பதுடன் ஏனைய மதத்தவர்களுக்கு அவர்களது மத சம்பிரதாயங்களை குறுகிய நேரத்துக்குள் மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றது. 

அதேபோன்று நீரில் பரவும் நோயான வாந்திபேதி (கொலரா) நோய் நிலைமைகளின்போதும் அதில் மரணித்தவர்களின் சடலங்களை இலங்கையில் அடக்கம் செய்திருக்கின்றது.

நீரில் பரவும் அவதானம் இல்லாத கொரோனா வைரஸில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் பேராசிரியர் ஜெனீபர் பெரேரா தெரிவித்திருந்தார்.

விஞ்ஞான அடிப்படையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த பிரகாரம், இந்த தீர்மானத்தை செயற்படுத்த தேவையான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக நீங்கள் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது தெரிவித்த பிற்பாடு, அது உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் பிரசாரமானது. 

உங்களது அறிவிப்பை வாழ்த்தி வெளிநாட்டு தலைவர்கள்கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்துடன் பல தூதரக காரியாலங்கள்கூட தங்களின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்திருந்த அறிக்கைகளை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

எனவே நீங்கள் இலங்கை அரசாங்கத்தின் பிரதமாரக எடுத்த இந்த தீர்மானத்தை, அரசியல் நோக்கத்துக்காக மறைப்பதற்கு இடமளிக்காது, அந்த தீர்மானத்தை செயற்படுத்த தேவையான வர்த்தமனி அறிவிப்பை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுப்பீர்கள் என நான் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அனைத்து மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment