ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை துண்டிக்க தயார் - ரஷ்யா - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை துண்டிக்க தயார் - ரஷ்யா

புதிய பொருளாதார தடைகளை விதித்தால் ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை துண்டிக்க தயார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை கைது செய்து சிறைத் தண்டனை விதித்த விவகாரத்தில் அந்நாட்டு அரசுக்கும் ஐரோப்பிய‌ கூட்டமைப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

அலெக்சி நவால்னியை சிறை வைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறும் ஐரோப்பிய கூட்டமைப்பு அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்கிடையே, ரஷ்யாவில் அலெக்சி நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஜெர்மனி, போலந்து மற்றும் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் 3 தூதர்களை ரஷ்யா அதிரடியாக வெளியேற்றியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மேற்கூறிய 3 ஐரோப்பிய நாடுகளும் தங்களது நாடுகளிலிருந்து ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது. மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக வலிமிகுந்த புதிய பொருளாதார தடைகளை விதித்தால் ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை துண்டிக்கத் தயாராக உள்ளோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரத் தடைகள் மிக முக்கியமான பகுதிகள் உட்பட நமது பொருளாதாரத்துக்கு அபாயங்களை உருவாக்கும். மேலும் இந்த தடைகளால் உறவுகளில் முறிவு ஏற்படக்கூடும். உலக விவகாரங்களிலிருந்து எங்களை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment