தூக்கத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இர்சாத் - மீண்டும் பிசிஆர் மேற்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

தூக்கத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இர்சாத் - மீண்டும் பிசிஆர் மேற்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உயிரிழந்த பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரொருவரின் சடலத்தை மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர, மாயாதுன்னே கொரயா ஆகிய நீதியரசர்கள் குழாமினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த மொஹமட் இப்ராலெப்பை மொஹமட் ஹக்கீம் என்பவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 26 வயது பிசியோதெரபிஸ்ட் ஆன இர்சாத் தூக்கத்தில் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அவரது உடலைத் தகனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது தந்தையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து, சடலத்தை தகனம் செய்வதை ​​நிறுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் (16) இடைக்கால தடை உத்தரவிட்டது.

அதன் பின்னர் நேற்று குறித்த மனு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி அப்ரூ, எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆட்சேபித்தார்.

இறந்தவரின் மரணத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையில் பிழை காணப்படுகின்றமை தொடர்பில் உறுதிப்படுத்த மனுதாரர் நீதிமன்றத்தில் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் மீண்டும் PCR சோதனை மேற்கொள்ளுமாறு கோருவதில் எந்தவித அடிப்படையும் அற்றது என்று அவர் கூறினார்.

இறந்தவரின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடத்த பிரதிவாதிகள் தரப்பு தயாராக இருந்த போதிலும், இறந்தவரின் தந்தையோ அல்லது உறவினர்களோ இதுவரை அதற்கு ஆதரவை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லாததால் மனுவை பரிசீலிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நேற்றையதினம் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, பி.சி.ஆர் சோதனைகள் குறைபாடுடையதாக உலக சுகாதார அமைப்பு கூட ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.

இதன் விளைவாக, கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டாரா என்பதைத் தீர்மானிக்க தனது கட்சிக்காரருக்கு இரண்டாவது பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

குறித்த நபரின் மகனான 26 வயது நபரின் சடலம் (ஜனாஸா) தற்போது களுபோவில மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad