இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சரின் எண்ணக்கருவிற்கமைய 25 மாவட்டங்களுக்கு 25 இளைஞர் மையங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சரின் எண்ணக்கருவிற்கமைய 25 மாவட்டங்களுக்கு 25 இளைஞர் மையங்கள்

அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கலாசார மையங்களின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரின் எண்ணக்கருவிற்கமைய ஒரு இளைஞர் மையத்தை (யூத் ஹப்) நிறுவுவது பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள கலாசார மையங்களை விளையாட்டு மற்றும் தொழில் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து கலந்துரையாடும் வகையில் அலரி மாளிகையில் நேற்று (2021.02.12) இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

25 மாவட்டங்களிலும் இளைஞர் மையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

இதில் முதலாவது, இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள மாத்தறை நாவிமன சார்க் கலாசார மைய வளாகத்தில் ஆரம்பிக்க முடியும் என நாமல் ராஜபக்ஷ பிரதமரிடம் முன்மொழிந்தார்.

அது தொடர்பில் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலை தொடர்ந்து தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு தொகுதி அமைந்துள்ள இடத்தில் நிர்மாணிக்கப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் கட்டிட தொகுதியொன்றை சார்க் கலாசார மையத்திற்கு வழங்க முடியும் என்றும் முன்மொழியப்பட்டது.

தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அந்த முன்மொழிவிற்கமைய செயற்பட முடியும் எனக் குறிப்பிட்டார்.

அனைவரையும் கொழும்பிற்குள் மட்டுப்படுத்தாமல், சகல மாவட்டங்களிலும் பரந்து காணப்படும் வகையில் செயற்படுவது பாராட்டத்தக்கது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அங்கு உரையாற்றி நாமல் ராஜபக்ஷ, யூத் ஹப் என்ற வேலைத்திட்டத்தை நாம் நிர்மாணித்தோம். இந்த எண்ணக்கருவிற்கமைய மாவட்ட மட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு இளைஞர் மையத்தை அமைக்க நாம் எதிர்பார்க்கிறோம். இது தற்போதுள்ள இளைஞர் மையங்கள், இளைஞர் அமைப்புகள் அல்லது இளைஞர் கழகங்கள் போன்றதல்ல. 

இதன் மூலம் இளைஞர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும், வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பத்தை நிரப்பவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும், தொழிற்பயிற்சியில் கவனம் செலுத்தவும், பொழுதுபோக்கிற்காக நடனம் உள்ளிட்ட கலாசார ரீதியாக ஒருங்கிணைந்த மையத்தை உருவாக்குதவற்கே இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய 25 மாவட்டங்களில் இதுபோன்ற 25 மையங்கள் நிறுவப்படும். இதற்காக தற்போதுள்ள நிறுவனங்கள் மற்றும் மையங்களின் கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். புதிய ஒன்றை உருவாக்குவது என்பது வீண் செலவாகும். 

மாத்தறை சார்க் கலாசார மையம் குறித்து எங்கள் கவனம் திரும்பியுள்ளது. இப்போது இரண்டு ஆண்டுகளாக கட்டுமானம் ஸ்தம்பித்திருக்கும் இடம் அது. இளைஞர் மையத்தின் முதல் கட்டத்தை அங்கிருந்து ஆரம்பிக்கலாம்.

இன்று நாம் சிறு வணிகத்திற்கான மற்றொரு புதிய எண்ணக்கருவை கொண்டு வந்தோம். அதுவானது பிரதேச செயலக பிரிவுகளில் சந்தை இல்லாத நாட்களில் சிறு வர்த்தகர்களுக்கு சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளித்தலாகும். ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதற்கான ஒரு முயற்சி இன்று எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில், சிறு வணிக உரிமையாளர்களுக்காக ஒரு தொகுதியில் ஒரு சந்தையில் குறைந்தபட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பளிப்போம். இந்த நோக்கத்திற்காக நிரந்தர மையங்களை எதிர்காலத்தில் இளைஞர் மையத்தில் நிறுவ எதிர்பார்க்கிறோம்.

தற்போதுள்ள கலாசார மையங்களுக்கு விளையாட்டு துறையில் எமக்கு உதவலாம். டேபிள் டென்னிஸ், பூப்பந்து, வூஷூ, கராத்தே மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளை கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கும் கொண்டுசெல்ல எதிர்பார்க்கிறோம். நாங்கள் சுமார் இரண்டு மாதங்களுக்குள் விளையாட்டு பொருட்கள் மற்றும் பயிற்சியாளர்களை வழங்க முடியும். முப்படை மற்றும் பொலிஸில் அதற்கான பயிற்சியாளர்கள் தயாராக உள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு தற்போது பயணச் சீட்டுகளை வழங்குகின்றோம். அதன்மூலம் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு பேருந்து மற்றும் புகையிரத பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. அச்செலவை விளையாட்டுத்துறை அமைச்சு பொறுப்பேற்கும். கலாசார அமைச்சின் பிள்ளைகளுக்கும் அவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்துவோம் என்றார்.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்கள் கூறுகையில், தற்போது காணப்படும் 30 கலாசார மையங்களில் புதிய வேலைத்திட்டமாக இவ்வாண்டு இளைஞர் மையங்களை (யூத் ஹப்) ஆரம்பியுங்கள்.

மாத்தறை நாவிமன சார்க் மையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாந்தி நாராங்கொட அவர்கள் தெரிவிக்கையில், நாவிமன மையம் 10 ஆண்டு காலமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானம் தொடர்பில் சிக்கல்கள் காணப்படுகின்றன. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் முன்மொழிவு மிகச் சிறந்ததாகும். விளையாட்டும் கலாசாரமும் ஒன்றுடனொன்று பிணைந்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு பணிப்பாளர் ரன்சிறி பெரேரா, நாவிமன சார்க் கலாசாரா மையத்திற்கு இதுவரை பாரிய நிதி, ஒன்றரை பில்லியன் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. எமக்கு சார்க் கலாசார மையத்தை கொழும்பை அண்மித்து நிர்மாணிக்க முடியும். அதற்காக வேறு கட்டிடத்தை வழங்குவது சிறப்பாகும்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார மேம்பாடு மற்றும் கட்டுமான பிரிவு மேலதிக செயலாளர் ஜி.விஜித நந்த குமார், நாவிமன சார்க் கலாசார மையத்திற்காக முதலில் மதிப்பீடு செய்யப்பட்ட 50 மில்லியன் ரூபாய் தற்போது 1583 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இறுதியளவில் நாம் 1432 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளோம். 

ஆனால் 75 வீதமான கட்டுமான பணிகளே நிறைவடைந்துள்ளன. இதனை செயற்படுத்துவதற்கான நிதியும் இலங்கை அரசாங்கத்தினாலேயே செலவிடப்பட வேண்டும். அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் 194 கலாசார மையங்கள் காணப்படுகின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராம விஜேகோன், இலங்கை மக்கள் தொகையில் 25 வீதமானோர் இளைஞர் யுவதிகளாவர். அது சுமார் 55 இலட்சமாகும். அவர்களது பல்வேறுபட்ட திறமைகளுக்கு தேவையான தொழிலை தெரிவுசெய்து வழங்குவது தொடர்பில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். 

இளைஞர்களுக்கு ஒன்றுகூடுவதற்கு இடமில்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் முச்சக்கர வண்டி நிறுத்தங்களில் ஒன்றுகூடிய சில சமயங்களில் நாட்டிற்கு சுமையாக அமையும் வேலைகளில் தொடர்புபடுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளன. எனவே முதற்கட்டமாக மாவட்ட மட்டத்தில் யூத் ஹப் நிர்மாணித்து, எதிர்காலத்தில் நாட்டிற்கு சுமையாக அல்லாத இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கம்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே, விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த முன்மொழிவு மிகச்சிறந்ததாகும். யூத் ஹப் போன்ற வேலைத்திட்டம் ஊடாக இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதனை நாம் பாராட்டுகின்றோம். அதற்கான கற்கைநெறியை தயாரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பூரண ஆதரவு வழங்கும். முதலாவது சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் அடுத்த மாதம் முதலாம் திகதி திறக்கப்படவுள்ளது.

அந்நேரத்தில் இலங்கையில் சுதேசம் குறித்த 11 கற்கைநெறிகள் தொடங்கப்படும். இந்த மையங்களின் பிள்ளைகளை ஈடுபடுத்தி, இந்த மையத்தில் அந்த படிப்புகளை நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது.

இசட் வெட்டுப்புள்ளி பாராது பிள்ளைகளை இந்த பாடத்திட்டத்தில் ஈடுபடுத்தி பிள்ளைகளுக்கு உள்ளூர் கலாசாரத்தை மதிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்க இப்பல்கலைக்கழகம் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த திட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவை நாம் வழங்குவோம்.

குறித்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, தேனுக விதானகமகே, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார மேம்பாடு மற்றும் கட்டுமான பிரிவு மேலதிக செயலாளர் ஜி. விஜித நந்த குமார் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment