வீதிப் பாதுகாப்பு தேசிய சபையை ஆணைக்குழுவாக மாற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கோபா குழு பரிந்துரை - 2007 முதல் 2016 வரை வீதி விபத்துக்களால் 25,607 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

வீதிப் பாதுகாப்பு தேசிய சபையை ஆணைக்குழுவாக மாற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கோபா குழு பரிந்துரை - 2007 முதல் 2016 வரை வீதி விபத்துக்களால் 25,607 பேர் பலி

போக்கு வரத்து அமைச்சின் கீழுள்ள வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் திறனை அதிகரிக்கும் வகையில் அதனை ஆணைக்குழுவாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) போக்கு வரத்து அமைச்சின் செயலாளருக்கு (10) பரிந்துரைத்தது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் கோபா குழு நேற்று முன்தினம் (10) கூடியதுடன், இலங்கை வீதிப் பாதுகாப்புத் தொடர்பில் செயற்படும் அரசாங்க நிறுவனங்களின் பங்குகள் குறித்த செயலாற்று அறிக்கை இங்கு ஆராயப்பட்டது.

அனைவருக்கும் பாதுகாப்பான வீதிக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையை, ஆணைக்குழுவாக மாற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், மீண்டும் இதற்கு அனுமதி கோரப்பட்டதால் இதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக இங்கு புலப்பட்டது. 

16 அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சபை உரிய முறையில் பலப்படுத்தப்படாமையால் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணிப்பது, வீதி விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான தேசிய கொள்கைத் திட்டத்தைத் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகள் காலதாமதமாகியுள்ளன. 

இதற்கமைய ஆணைக்குழு விரைவில் உருவாக்கப்பட்டு அதற்கான பணியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டுமென கோபா குழு, போக்கு வரத்து அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது.

வீதி விபத்துக்களினால் நாளொன்றுக்கு 6 - 8 பேர் உயிரிழப்பதாகவும், 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களால் 25,607 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இவ்வாறான பின்புலத்தில் வீதி விபத்துக்களைத் தடுப்பதை தேசிய பணியாகக் கருதி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்தையும் குழு வலியுறுத்தியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad