லடாக் எல்லையில் இருந்து 200 போர் டாங்கிகளை வாபஸ் பெற்றது சீனா - கடந்த 9 மாதங்களாக நிகழ்ந்து வந்த பதற்றம் தணியத் தொடங்கியது - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

லடாக் எல்லையில் இருந்து 200 போர் டாங்கிகளை வாபஸ் பெற்றது சீனா - கடந்த 9 மாதங்களாக நிகழ்ந்து வந்த பதற்றம் தணியத் தொடங்கியது

ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு லடாக் எல்லையில் இருந்து 200 போர் டாங்கிகளை சீனா வாபஸ் பெற்றது.

லடாக்கின் இமய மலை பகுதியில் இந்திய - சீன எல்லைப் பகுதிகள் 1,597 கி.மீ. நீளத்திற்கு அமைந்துள்ளன. இங்கு ஊடுருவல் ஏதும் நிகழ்ந்து விடாமல் தடுக்க இரு நாட்டு படைகளும் முகாம் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் சீன படைகள் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஊடுருவியது. அவற்றை தடுத்து நிறுத்தும் பணியில் இந்தியா ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜூன் 14ம் திகதி சீனாவை சேர்ந்த பெரும் படையினர் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதன் பிறகு அந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. இரு தரப்பினரும் ராணுவத்தை குவித்தார்கள்.

அதே நேரத்தில் இந்திய ராணுவம் முன்னேறி சென்று அங்குள்ள ரசல்லா பகுதியில் உள்ள உயரமான மலை முகடுகளை கைப்பற்றினார்கள்.

இரு நாட்டு படைகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நேர் எதிரே நின்றனர். எனவே எந்த நேரத்திலும் பெரிய அளவில் மோதல் வெடிக்கலாம். இது போராக கூட மாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதில் படைகளை வாபஸ் பெற முதலில் சம்மதித்தாலும், பின்னர் சீனா பிடிவாதமாக இருந்து அதே இடத்தில் படைகளை குவித்து உள்ளது. பதிலுக்கு இந்தியாவும் படைகளை குவித்தது.

ஆனாலும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெயசங்கர் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சீனாவுடன் தொடர்ந்து பேசினார்கள்.

மேலும் ராணுவ தளபதிகள் தரப்பிலும் தனியாக 9 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து சீனா தனது படையை வாபஸ் பெற சம்மதித்தது.

லடாக் எல்லையில் பாங்காங் ஏரி, டெப்சாங், காக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ், டெம்சாக் ஆகிய இடங்களில் சீன படைகள் அத்துமீறி நுழைந்து முகாமிட்டு இருக்கின்றன.

இதில் பாங்காங் ஏரி பகுதியில் முதல் கட்டமாக படையை வாபஸ் பெறுவதற்கு சம்மதம் தெரிவித்தன. அதன்படி பாங்காங் ஏரியின் வடக்கு பகுதியில் படைகளை வாபஸ் பெறும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

சீன படைகள் இந்த இடத்தில் 200 க்கும் மேற்பட்ட போர் டாங்கிகளையும் நூற்றுக்கணக்கான பீரங்கி உள்ளிட்ட தாக்குதல் வாகனங்களையும் நிறுத்தி இருந்தது. அவற்றை வாபஸ் பெற்றது.

இதேபோல இந்தியாவும் நூற்றுக்கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை நிறுத்தி இருந்தது. அவற்றை இந்தியாவும் வாபஸ் பெற்று வருகிறது.

பாங்காங் ஏரியின் வடக்கு பகுதியில் பல்வேறு மலை முகடுகள் உள்ளன. இதில் 3ம் எண் கொண்ட மலை முகட்டுக்கு இந்திய படைகள் திரும்பி வருகின்றன.

சீன படைகள் 4ம் எண் கொண்ட முகடு வரை வந்து முகாம் அமைத்திருந்தது. இப்போது அவர்கள் 8ம் எண் முகட்டுக்கு திரும்பி செல்கின்றனர்.

அதற்கு இடைப்பட்ட பகுதியில் இரு நாட்டு படைகளும் ரோந்து உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

3 நாட்களில் போர் டாங்கிகள், ஆயுத வாகனங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளைக்குள் அனைத்து போர் வாகனங்களும் வெளியேறிவிடும். இடைப்பட்ட பகுதியில் சிறிய கட்டுமானங்கள், பதுங்கு குழிகளை அமைத்திருக்கிறார்கள். அவற்றையும் அழித்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தையும் 15 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து பணிகளும் முடிந்த பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காங் ஏரியின் வடக்கு பகுதியில் படை வாபஸ் நடந்து வந்தாலும், தெற்கு பகுதியில் இன்னும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. அதேபோல டெப்சாங், காக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ், டெம்சாக் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து இரு நாட்டு படைகளும் முகாமிட்டு இருக்கின்றன. அந்த இடங்களில் இருந்து வாபஸ் பெறுவது தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

படைகள் வாபஸ் பெறப்படுவதால் எல்லையில் கடந்த 9 மாதங்களாக நிகழ்ந்து வந்த பதற்றம் தணியத் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment