யாழ். மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லை - புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

யாழ். மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லை - புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா

யாழ். மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் மூத்த புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக அவர் மேலும் கூறுகையில், யாழ். மாநகரத்தின் 1956 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1246 குளங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 1056 குளங்களே காணப்படுகின்றன. யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 18 குளங்கள் காணாமல் போயுள்ளதோடு 19 குளங்களின் பரப்புகள் மனித செயற்பாடுகளால் குறைக்கப்பட்டுள்ளன.

மாநகரத்தின் தனியார் விடுதிக்கு அருகாமையில் காணப்பட்ட குளம் ஒன்று காணாமல் போயுள்ளதோடு மாநகர கட்டடத் தொகுதி அமைப்பதற்காக குளத்தின் கணிசமான பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.

நகரப் பகுதியில் அமைந்துள்ள வழிபாட்டு தலம் ஒன்றின் தேர்முட்டி அமைப்பதற்காக அருகிலிருந்த குளத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதோடு யாழ் பல்கலைக்கழகத்தின் ஆனந்தகுமாரசாமி விடுதி அமைந்துள்ள பிரதேசத்தில் காணப்பட்ட குளம் ஒன்று காணாமல் போயுள்ளது.

யாழ். மாநகரத்தின் பல பகுதிகளில் குளங்கள் காணாமல் போயுள்ளதோடு பல குளங்கள் அமைக்கப்பட்ட பின்னர் அதன் அளவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அண்மையில் யாழ் மாநகரத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் குறிப்பாக யாழ். ஸ்டான்லி வீதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை நோக்கும்போது குறித்த பகுதிகளில் வழிந்தோடும் வெள்ள நீர் அருகிலுள்ள புல்லுக் குளத்தை சென்றடைகின்ற நிலையில் அதன் பல பகுதிகளை மூடி யாழ் மாநகர சபை கட்டடங்கள் அமைத்ததே காரணமாகும்.

யாழ் மாவட்டத்தில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய குளங்கள் உருவாக்கப்படுவதோடு ஏற்கனவே இருந்த குளங்கள் தூர்வாரப்பட வேண்டும். 

வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வீடுகளுக்கு அருகாமையில் புதிய குளங்கள் உருவாக்கப்படுவதோடு சிறிய நீர் நிரப்புக் கிணறுகள் உருவாக்குவதன் மூலமும் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கும் வரட்சியான காலப்பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

கோப்பாய் கநிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad