காலாவதியான ஒரு இலட்சத்து 18,000 ஜம்போ பீனட்ஸ் பக்கட்டுக்களை மீள் பொதியிட்ட தொழிற்சாலைக்கு சீல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

காலாவதியான ஒரு இலட்சத்து 18,000 ஜம்போ பீனட்ஸ் பக்கட்டுக்களை மீள் பொதியிட்ட தொழிற்சாலைக்கு சீல்

(எம்.மனோசித்ரா)

பேலியகொட - நுகேபார பிரதேசத்தில் உணவு உற்பத்தி தொழிற்சாலையொன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட காலாவதியான 'ஜம்போ பீனட்ஸ்' எனப்படும் சிற்றுண்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவிக்கையில், காலாவதியான திகதியுடன் காணப்பட்ட ஒரு இலட்சத்து 18,000 ஜம்போ பீனட்ஸ் பக்கட்டுக்கள் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

காலாவதியான அவற்றை பழைய பக்கட்டுக்களிலிருந்து அகற்றி, புதிய பக்கட்டுக்களில் பொதியிட்டுக் கொண்டிருக்கும் போது பொலிஸார் தொழிற்சாலையை சுற்றி வளைத்துள்ளனர்.

தற்போது குறித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிற்றுண்டியின் பெறுமதி சுமார் 3 கோடியாகும். இதற்கு முன்னரும் இதேபோன்று காலாவதியான மருந்துகள், உலர் உணவுகள் உள்ளிட்டவற்றை திகதியை மாற்றி மீள் பொதி செய்து வியாபாரம் செய்பவர்கள் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இது மனிதாபிமானத்தை மீறி செய்யப்படும் குற்றமாக கருதப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் பொதுமக்கள் வெவ்வேறு உடல்நல சுகாதார பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனவே இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment