வட மாகாணத்தில் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்த 118 மையங்கள் தயார் - வைத்தியரத் ஆ.கேதீஸ்வரன் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

வட மாகாணத்தில் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்த 118 மையங்கள் தயார் - வைத்தியரத் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூ போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி கிடைத்தவுடன் உடனடியாக திட்டம் ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “வட மாகாணத்தில் சுகாதாரப் பணிளாயர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவு செய்துள்ளோம். இதன்படி, 85 வீதமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவேளை, பொதுமக்களுக்கு தடுப்பூசியைப் போடுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை நாம் செய்து வருகின்றோம்.

ஐந்து மாவட்டங்களிலும் அரசாங்க அதிபர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம்.

அவர்கள் மூலமாக பொதுமக்களில் வயது அடிப்படையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் பெற்றுள்ளோம்.

மேலும், வட மாகாணத்தில் 118 நிலையங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். குறித்த நிலையங்களுக்கு பொதுமக்களை அழைத்து வரும் பணியை பிரதேச சபை உத்தியோகத்தர்களிடம் கேட்டுள்ளோம்.

தடுப்பூசி கிடைத்தவுடனேயே, பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இதுவேளை, பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து இதுவரை வடக்கு மாகாணத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, மன்னாரில் 35 பேருக்கும், கிளிநொச்சியில் 14 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் வவுனியாவில் 10 பேருக்கும் முல்லைத்தீவில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று ஆரம்பமாக காலத்திலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்தில் 882 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, வவுனியாவில் 372 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 232 பேருக்கும் மன்னாரில் 217 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கிளிநொச்சியில் 48 பேருக்கும் முல்லைத்தீவில் 13 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad