இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் - வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் - வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்பு நாடுகளிடம் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிக முக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

அந்தப் பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, அதில் மேலும் கூறியிருப்பதாவது சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஏற்றவாறான, தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பொறுப்புக் கூறல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறவில்லை. ஒருமித்த தீர்மானத்திற்கு வர முடியும் என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை கேட்டுவிட்டார்கள்.

எதிர்காலத்தில் பொறுப்புக் கூறலை உறுதிசெய்வதையும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுப்பதையும் நோக்காகக் கொண்ட சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் 'ஒருமித்த தீர்மானம்' ஒன்றினால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.

ஆகவே இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றை வலியுறுத்துகின்றோம் என்று மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad