அரசாங்கம் 'பெயில்' என்பது ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விடயத்திலும் உறுதியாகியுள்ளது - வேலுகுமார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

அரசாங்கம் 'பெயில்' என்பது ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விடயத்திலும் உறுதியாகியுள்ளது - வேலுகுமார் எம்.பி.

நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 'பெயில்' என்பது ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விடயத்திலும் உறுதியாகியுள்ளது - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்கள் சிலருடன் இன்று (13) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வழங்கியிருந்தனர். இது தொடர்பில் விசேட அறிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலும் அதற்கான முன்மொழிவு இடம்பெற்றிருந்தது. சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிறுவனங்களின் முகாமைத்துவம் மீள் பரிசீலனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பிரமாண்டமான அறிவிப்புகளையும், உறுதிமொழிகளையும் வழங்கிய அரசாங்கம் இன்று கம்பனிகளுக்கு காவடி தூக்கும் வகையில் செயற்படுகின்றது. இதன்மூலம் அரசின் முகத்திரை கிழிந்துள்ளது.

கம்பனிகள் தங்க முட்டையிடும் வாத்து எனவும், ஒரேடியாக அதனை வெட்டிவிடமுடியாது என தொழில் அமைச்சர் கூறுகிறார். மறுபுறத்தில் சம்பள விடயத்தில் கம்பனிகளே முடிவெடுக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். தேர்தல் காலத்தில் கம்பனிகளை எச்சரித்தவர்கள், இன்று கொஞ்சுகின்றனர். வீராப்புபேசிய தொழிற்சங்கங்களும் கெஞ்சுகின்றன.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வழங்கும் உறுதிமொழி என்பது காற்றில் பறக்ககூடியது என சுட்டிக்காட்டிருந்தோம். சம்பள விடயத்திலும் அது உறுதியாகியுள்ளது. எமது ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாட் சம்பளத்தில் 40 சதவீத அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அழுத்தம் கொடுத்தோம். இறுதியில் அது நடைபெற்றது. எனவே, தொழிலாளர்களுக்கு கட்டாயம் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம்." - என்றார்.

No comments:

Post a Comment