தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் ஆராய்வு, கொரோனா இன்னமும் சமூக பரவலாக மாற்றம் பெறவில்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 14, 2021

தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் ஆராய்வு, கொரோனா இன்னமும் சமூக பரவலாக மாற்றம் பெறவில்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தவுள்ள தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் பெப்ரவரி மாதத்தில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் தடுப்பூசிகள் குறித்த நடவடிக்கைகள், தற்போதைய சுகாதார நிலைமைகள் குறித்து அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொரோனா தடுப்பூசிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டே வருகின்றது, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது குறித்த தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் இங்கிலாந்தின் "ஒக்ஸ்போர்ட் - அக்ஸ்டோனிக்" தடுப்பூசிகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தின் இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்த உடன்படிக்கை ஒன்று கைச்சாதிட்டப்பட்டுள்ளதை அடுத்து எம்மால் இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

எனவே இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளோம். எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இதற்கான உடன்படிக்கை மட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும், வெகுவிரைவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோல் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர முன்னர் இலங்கையில் நாம் என்ன செய்ய வேண்டும், களஞ்சியப்படுத்துவது எவ்வாறு, எத்தனை நாட்களுக்குள் தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டும், எவ்வாறு சகல பகுதிகளுக்கும் இவற்றை பங்கிடுவது என்ற விடயங்கள் குறித்து தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இப்போதே இது குறித்த ஆராய்வு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டாலும் கூட இன்னமும் சமூக பரவலாக இது மாற்றம் பெறவில்லை என்பது ஆரோக்கியமான விடயமாக கருதப்பட வேண்டும். 

வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களில் நாம் வெற்றிகண்டு வருகின்றோம். உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நாடுகளில் நாம் முன்னணியில் உள்ளோம். எமது நாட்டின் சுகாதார சேவைகள் தரம் உயர்வாக உள்ளமையும் மக்கள் விதிமுறைகளுக்கு கட்டுப்படுகின்றமையுமே காரணமாகும் என்றார்.

No comments:

Post a Comment