அமெரிக்காவில் மிருகக்காட்சிசாலையிலுள்ள இரண்டு கொரில்லாக்களுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

அமெரிக்காவில் மிருகக்காட்சிசாலையிலுள்ள இரண்டு கொரில்லாக்களுக்கு கொரோனா

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் குறைந்தது இரண்டு கொரில்லாக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலும் மற்றும் அமெரிக்காவிலும் இதுபோன்ற விலங்குகளிடையே கொரோனா தொற்று அறியப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

மிருகக்காட்சிசாலையின் தகவலின் படி, இரண்டு கொரில்லாக்களுக்கு கடந்த புதன்கிழமை முதல் தொடர் இருமல் ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சான் டியாகோ மிருகக்காட்சிசாலை, கலிபோர்னியா விலங்கு சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆய்வக அமைப்பு மூலம் கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய மல மாதிரிகளை பரிசோதிக்கும் பணியைத் தொடங்கியது. 

ஜனவரி 8 ஆம் திகதி கொரில்லா கூட்டத்தில் வைரஸ் இருப்பதை முதற்கட்ட பரிசோதனைகளில் கண்டறிந்தன. இந்நிலையில், அமெரிக்க விவாசயத் திணைக்களம் மற்றம் தேசிய கால்நடை சேவைகள் ஆய்வகங்கள் திங்களன்று கொரோனா தொற்றை உறுதிப்படுத்தின.

பரிசோதனை முடிவுகள் சில கொரில்லாக்களில் கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன, மேலும் கொரில்லா கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களில் வைரஸ் இருப்பதை நிராகரிக்கவில்லை.

கொரில்லாக்களுக்கு மிருகக்காட்சிசாலை பராமரிப்பு குழுவின் உறுப்பினரிடமிருந்து கொரோன தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பராமரிப்பு குழுவின் உறுப்பினருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் அறிகுறியற்றவராக இருந்துள்ளார். கொரில்லாக்களை பராமரிக்கும் எல்லா நேரங்களிலும் முகக் கவசங்கள் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து இருந்துள்ளார்.

கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த மிருகக்காட்சிசாலை டிசம்பர் 06 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad