இராணுவத்தினருக்கு சுகாதார அறிவு இல்லை, முஸ்லிம்கள் ஜனாஸா விடயத்தில் வேதனையுடன் உள்ளனர் : செல்வராஜா கஜேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

இராணுவத்தினருக்கு சுகாதார அறிவு இல்லை, முஸ்லிம்கள் ஜனாஸா விடயத்தில் வேதனையுடன் உள்ளனர் : செல்வராஜா கஜேந்திரன்

(ஆர்.யசி, எம்.அற.எம்.வசீம்)

சுகாதார விவகாரங்களில் இராணுவத்தை நியமித்து அவர்கள் தீர்மானம் எடுக்கும் நிலைமை உருவாக்கியுள்ளமையே நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு காரணமாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இராணுவத்தினருக்கு சுகாதார அறிவு இல்லை எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டின் தற்போதைய கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது. இதனால் அவர்களின் உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். 

அதேபோல் கொரோனா வைரஸ் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளமைக்கான காரணம் என்னவெனில் இராணுவம் இந்த செயற்பாடுகளை கையாளும் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளமையேயாகும்.

இராணுவத்தினருக்கு சுகாதார அறிவு கிடையாது. சுகாதார துறையினர் இருக்கும் குழுவில் ஒரு இரு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டால், அதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் இராணுவத்தின் தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு குழு இருப்பது அடிப்படை தவறாகும். 

தீர்மானம் எடுக்கும் முடிவுகளை சுகாதார அதிகாரிகள் எடுக்க முடியாத நிலைமையே நிலவுகின்றது. எனவே இராணுவ மயப்படுதலினால் அச்சமே நிலவுகின்றது.

அதேபோல் சுகாதார அமைச்சர் பொறுப்பற்ற செயற்பாடுகளை கையாள்கின்றார். குறிப்பாக முஸ்லிம் மக்கள் ஜனாஸா விடயத்தில் மிகுந்த வேதனையுடன் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் நீங்கள் பொறுப்பற்ற செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருக்காது உடனடியாக விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரைக்கு அமைய ஜனாசாக்களை புதைக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment