விக்னேஸ்வரன் தரப்பினரின் முன்மொழிவுகளையும் சேர்த்துக் கொள்ள இணங்கியிருக்கின்றோம் - கஜேந்திரன் எம்.பி - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

விக்னேஸ்வரன் தரப்பினரின் முன்மொழிவுகளையும் சேர்த்துக் கொள்ள இணங்கியிருக்கின்றோம் - கஜேந்திரன் எம்.பி

சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையானது ஒரு அறிக்கையோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்ற கவலை எம்மிடம் இருந்தாலும், விக்னேஸ்வரன் தரப்பு கூறிய விடயத்தையும் சேர்த்துக் கொள்வதற்கு இணங்கியிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களை கையாள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடலின் நிறைவிலான ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த ஊடக சந்திப்பில் எஸ்.கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பாக வடக்கு- கிழக்கில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புக்களிற்கும் தமிழ்த் தேசிய பரப்பில் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளிற்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

அந்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன படுகொலைக்கு நீதி விசாரணை தொடர்பாக கடந்த 8 வருடமாக மனித உரிமை பேரவையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்பட்டிராத நிலையில் அந்த பொறுப்பு கூரல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவது என்ற விடயத்தில் இணக்கப்பாடு காணப்பட்டிருக்கின்றது.

அது தொடர்பான அறிக்கையினை கையொப்பம் இட்டு அனுப்புவது தொடர்பில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கின்றது.

மேலும், விக்னேஸ்வரன் தரப்பினர் சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமை பேரவையினுடைய விடயம் நான்கிற்குள் இணைத்து, இங்கே கொண்டு வரவேண்டும் என்ற விடயத்தை முன்வைத்தார்கள்.

அந்த கருத்தானது பிரியோசனம் இல்லை எனவும் மீண்டும் பேரவைக்குள் முடக்கப்படும் என்ற கருத்தை நாம் குறிப்பிட்டு எதிர்த்து வலியுறுத்தி உள்ளோம். அந்த கருத்தை பொது சபையின் முன்னாள் கோரிக்கையாக முன்வைத்தபோது ஒரு வருடத்திற்கு உட்பட்ட கால அவகாசத்தோடு அவ்வாறு சம்மதம் தெரிவிக்க வேண்டிய நிலைமை இருந்தது.

எங்களை பொறுத்தவரையில் சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையானது ஒரு அறிக்கையோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்ற கவலை எம்மிடம் இருக்கின்றது.

ஆனாலும் விக்னேஸ்வரன் தரப்பு அந்த விடயத்தில் பிடிவாதமாக நின்றமையால் நாங்கள் கால அவகாசத்தோடு அந்த விடயத்தையும் சேர்த்துக்கொள்வதற்கு இணங்கியிருக்கின்றோம். அது தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad