வட்டுவாகல் பாலத்தினைச் சீரமைத்து, நந்திக் கடலை ஆழப்படுத்துங்கள், இரட்டை வாய்கால் வீதியும் சீரமைக்கப்பட வேண்டும் - ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரவிகரன் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

வட்டுவாகல் பாலத்தினைச் சீரமைத்து, நந்திக் கடலை ஆழப்படுத்துங்கள், இரட்டை வாய்கால் வீதியும் சீரமைக்கப்பட வேண்டும் - ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரவிகரன் கோரிக்கை

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தினை சீரமைப்பதுடன், நந்திக் கடலினை ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

அதேவேளை இரட்டை வாய்க்கால் - சாலை வீதியையும் சீரமைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 26.01.2021 நேற்று இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் குறித்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் மிக நீண்ட காலமாக சீரின்றிக் காணப்படுகின்றது. எனவே அப்பாலத்தினை சீரமைக்க உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறான முக்கியமான பாலமொன்று தென்னிலங்கையில் சீரின்றி இருந்தால் அதனை உடனடியாக சீரமைத்திருப்பார்கள். வட பகுதி என்பதால்தான் குறித்த பாலத்தினை அமைக்கும் வேலைத்திட்டம் கால தாமதமாகின்றதா? எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். 

அத்தோடு நந்திக் கடல் ஆழப்படுத்தும் வேலைத் திட்டத்தினை துரிதமாக மேற்கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேவேளை இரட்டை வாய்க்கால் தொடக்கம் வலைஞர் மடம், பொக்கணை, மாத்தளன் ஊடாக சாலை வரை செல்லும் வீதியினை சீரமைப்பதற்கும் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குறித்த வீதியானது மிக மோசமாகப்பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இதனால் மிக நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் போக்கு வரத்துச் செய்வதில் மிகுந்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். எனவே அவ்வீதியினை சீரமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார். 

இந்நிலையில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இதற்கு பதிலளிக்கும்போது, வட்டுவாகல் பாலத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பேசப்பட்டு அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை நந்திக் கடலினை ஆழப்படுத்துவதை துரிதப்படுத்த உரியவர்களுக்கு வலியுறுத்துவோம். 

மேலும் தற்போது விசேட திட்டம் ஒன்றினூடாக சீரின்றிக் காணப்படும் வீதிகளை உள்வாங்கி சீரமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளோம். அவ்வேலைத் திட்டத்தில் இரட்டை வாய்க்கால் தொடக்கம் சாலை வரையான வீதியை உள்வாங்கி அவ்வீதியை சீரமைப்பதற்குரிய நடவடிக்கை எடுப்போமெனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment