அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் மாறப்போகிறோமா? அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் என்கிறார் சிறீதரன் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் மாறப்போகிறோமா? அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் என்கிறார் சிறீதரன் எம்.பி.

இம்மண்ணிலே நாம் தமிழ்த் தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழ வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். 

அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழ வேண்டிய காலம் வருமோ அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கின்ற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.

உதய நிலா விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட உதய நிலா பிரீமியர் லீக் மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், மிக முக்கியமாக இன்றைய காலகட்டம் என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையை தந்திருக்கிறது. இன்று என்ன நடக்கிறது நாளை, நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழ வேண்டிய காலம் வருமோ? அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கின்ற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம். 

இந்த வேளையில் நான் இளைஞர்களை கோருவது இம்மண்ணிலே நாம் தமிழ்த் தேசிய இனமாக, எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக, உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழ வேண்டும்.

இன்று (நேற்று) கூட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் ஒருவன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். 

அந்த மாணவனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, 'உணர்வு என்பது என் உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது, தாய் தந்தையிரிடம் கேட்க வேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது, என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது, அதனால் இந்தப் போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன்' என்று குறிப்பிட்டிருந்தான். 

இந்த செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் எத்தனை இடர்களை சந்திக்கப் போகின்றோம். சிங்கள பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப் பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக வாழ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad