புதிய ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

புதிய ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

(நா.தனுஜா)

நாட்டில் போர்க் குற்றங்களோ அல்லது மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. இத்தகைய அரசாங்கத்தினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு தொடர்பில் வினவியபோது அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் சில ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் முழுமையாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. மேலும் சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை என்ற நிலைப்பாட்டையே தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றதும் கடந்த கால ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாதுமான இந்த அரசாங்கம் நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை கொள்ளமுடியாத நிலையே காணப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி அண்மைக் காலத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்போரில் அநேகமானோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதையும் அச்சுறுத்தப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவை பொதுமக்கள் நம்புவது கடினமான விடயமாகும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad