ஏறாவூர் கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியினால் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 10, 2021

ஏறாவூர் கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியினால் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியினால் எடுக்கப்பட்டுள்ள கண்டிப்பான தீர்மானங்களை அனுசரிக்குமாறு ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.ஆர். ஷியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.

கொரோனா தவிர்ப்பு செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி திங்கட்கிழமை 11.01.2021 முதல் வியாழக்கிழமை 14.01.2021 வரை பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பலசரக்குக் கடைகள், புத்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படுதல் வேண்டும்.

பொதுச் சந்தைகளில் அத்தியவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களை விற்பனை செய்தல் தடை செய்யப்படுவதுடன், பொருட் கொள்வனவிற்காக வருகை தரும் நுகர்வோர்கள் முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதுடன், தேவையற்ற ஒன்றுகூடல்களையும் தவிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இந்தக் காலப்பகுதிகளில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் பேணப்படுவதனை உறுதிப்படுத்துவது வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படாது, சன நெரிசல் காணப்படும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்கள் தொடர்பில் கண்காணிப்பு குழுவினால் அறிக்கையிடப்படும்பட்சத்தில் குறிப்பிட்ட வர்த்தக நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நினைவில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பொலிஸாராலும் பாதுகாப்பு தரப்பினராலும் குறிப்பிடப்பட்ட காலப் பகுதிக்குள் வியாபார நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment