யாழ். பல்கலை தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களின் அடையாளம் அதனைச் சிதைக்க முற்படாதீர், கடந்த கால வரலாற்றை உபவேந்தர் கேட்டறிந்து கொள்வது இனிவரும் காலத்திற்கு நல்லது - சுரேஷ் பிறேமச்சந்திரன் கண்டனம் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

யாழ். பல்கலை தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களின் அடையாளம் அதனைச் சிதைக்க முற்படாதீர், கடந்த கால வரலாற்றை உபவேந்தர் கேட்டறிந்து கொள்வது இனிவரும் காலத்திற்கு நல்லது - சுரேஷ் பிறேமச்சந்திரன் கண்டனம்

யாழ். பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களின் அடையாளம் அதனைச் சிதைக்க முற்படாதீர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் விருத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யாழ். பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களுடன் இரண்டறக் கலந்தது. அதன் மாண்பினை கெடுக்கும் வகையிலான செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களை அவமதிக்கும் செயலாகவே அமையும். எனவே இத்தகைய செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

யாழ். பல்கலைக்கழகம் வெறுமனே பட்டதாரிகளை உருவாக்கும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. அது தமிழர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கின்ற இடமுமாகும். அதுமட்டுமன்றி தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தின் சாட்சியாகவும் அதன் பரிணாம பரிமான வளர்ச்சியோடும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற அறிவுசார் செயற்பாட்டுக் களமுமாகும்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துடன் யாழ். பல்கலைக்கழகம் இரண்டறக் கலந்து பணியாற்றி வந்துள்ளமையை அனைவரும் அறிவர். தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூர்வதற்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவு (08.01.2021) இரகசியமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் மூலம் யாழ். பல்கலைக்கழகத்தின் மான்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

பொங்கு தமிழ் நிகழ்வை முன்னின்று நடத்தியவர் என்று பெருமை பேசிய துணைவேந்தரே அந்த நினைவுத் தூபியை இடிப்பதற்கு முன்னின்று செயற்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் தங்களது அன்பிற்கினிய உறவுகளை நினைவு கூர்வதற்காக கட்டிய தூபியை இடித்ததன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் எத்தகைய பலனை அடைய நினைக்கின்றனர் என்பது தெரியவில்லை.

இதனை இடித்ததை விட அதற்கான காரணத்தை முன்வைக்கும் உபவேந்தரின் கருத்துகள் முன்னிற்குப் பின் முரணாக இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. சட்டவிரோத கட்டடங்களை அகற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து அறிவுறுத்தல் வந்திருப்பதாகவும் தனக்கு மேலிடத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் மாறுபட்ட கருத்துகளை துணை வேந்தர் கூறியிருக்கிறார்.

பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு செனட் சபை என்ற அமைப்பு இருக்கிறது. மாணவர் அமைப்பு இருக்கிறது. விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பதிவாளர், பர்சார் போன்று பல தரப்பட்டவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருடனும் கலந்துரையாடி ஒரு சரியான முடிவை எடுத்துச் செயற்பட்டிருந்தால் யாருக்கும் எதுவித சந்தேகமும் வரப்போவதில்லை.

ஆனால், ஒருவருடனும் கலந்துரையாடாமல் இரவோடு இரவாக தன்னிச்சையாகச் செயற்பட்டு அந்த நினைவுத் தூபியை இடிக்க வேண்டியதன் அவசியத்தை உபவேந்தர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோருகிறோம்.

ஒரு சட்ட விரோத கட்டுமானத்தை அகற்ற வேண்டும் என்று தீர்மானித்தால் அதனை பகல் வேளையில் பகிரங்கமாகச் செய்திருக்கலாமே அதனைவிடுத்து இரவோடிரவாக அதனை இடிக்க வேண்டியதன் அவசியமென்ன?

இதுவரை உபவேந்தர் பதவியில் இருந்த எவரும் செய்யாத ஒரு செயலை இந்த உபவேந்தர் செய்திருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலாசார பண்பாட்டு விழுமியங்களை அவமதித்துள்ளது. உபவேந்தரின் இந்தச் செயலை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவரது தன்னிச்சையான இச்செயலை நாம் கவலையுடன் கண்டிக்கிறோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் அனைத்துவித நடவடிக்கைகளுடனும் இரண்டறக் கலந்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மட்டுமன்றி சர்வதேச நாடுகளின் அரச ஒழுங்கு முறைகளையும் கண்காணித்து, ஆய்வுக்குட்படுத்தி, ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதனை சுட்டிக்காட்டி, அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய விதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செயற்பட்டு வந்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கடந்த கால வரலாற்றை உபவேந்தர் கேட்டறிந்து கொள்வது இனிவரும் காலத்திற்கு நல்லது. உலகத்தின் ஜனநாயக விழுமியங்களை பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தைக் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்விசார் நிறுவனத்தின் நிர்வாகம் தன்னிச்சையான எதேச்சாதிகாரமான முடிவினை மேற்கொள்வது நியாயமா எனவும் சுரேஷ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad