ரஞ்சனின் சிறைத் தண்டனை அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கான சிவப்பு எச்சரிக்கை - உலபன்னே சுமங்கல தேரர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

ரஞ்சனின் சிறைத் தண்டனை அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கான சிவப்பு எச்சரிக்கை - உலபன்னே சுமங்கல தேரர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

ரஞ்சன் ராமநாயக்கவுக்கான சிறைத் தண்டனையை அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கான சிவப்பு எச்சரிக்கையாகவே பார்க்கின்றோம் என உலபன்னே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நீதிமன்றத்துக்கு நாங்கள் மரியாதை செலுத்துகின்றோம். அதன் தீர்ப்புகளுடன் உடன் படுகின்றோம். என்றாலும் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 20ஆம் திருத்தம் ஊடாக நாட்டின் நீதிமன்றத்துக்கு இருந்த சுயாதீனத்தன்மையை இல்லாமலாக்க செயற்பட்டு வருகின்றது.

சிவப்பு பிடியாணை பிரப்பிக்கப்பட்டிருப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கும் பிள்ளையான், சட்டத்தின் ஊடாகவே விடுதலையாக சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. 

பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு குற்றச்சாட்டு தாக்கல் செய்த சட்டமா அதிபர் திணைக்களமே அதனை நீக்கிக் கொண்டுள்ளது. அத்துடன் பிள்ளையானுக்கு பிணை வழங்குவதற்கு முன்னரே ஆதரவாளர்கள் பட்டாசு மற்றும் மலர் மாலைகளுடன் இருந்தனர். இது எமது நாட்டின் சட்டம் தொடர்பில் எமக்கு இருக்கும் பாரிய பிரச்சினையாகும்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் கவலையடைகின்றோம். அவர் பாராளுமன்றத்துக்குள் ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். ஆளும் தரப்பினர் பாராளுமன்றத்துக்குள் குண்டர்கள் போன்றே எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பதிலளித்து வருவதை எமக்கு அண்மைக்காலங்களில் காணமுடிந்தது. 

ரஞ்சன் ராமநாயக்கவின் சில நடவடிக்கைகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். என்றாலும் அவர் நீதி நியாயத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையானது, அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகவே பார்க்கின்றோம். இது அரசாங்கத்தின் சிவப்பு எச்சரிக்கையாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad