சிங்கம் போன்று வேடமிட்டுள்ள நரிகளின் கருத்துக்களுக்கு புத்திசாலி சிங்கள மக்கள் ஏமாறமாட்டார்கள் - அமைச்சர் பியல் நிஷாந்த - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

சிங்கம் போன்று வேடமிட்டுள்ள நரிகளின் கருத்துக்களுக்கு புத்திசாலி சிங்கள மக்கள் ஏமாறமாட்டார்கள் - அமைச்சர் பியல் நிஷாந்த

(இராஜதுரை ஹஷான்)

சிங்கம் போன்று வேடமிட்டுள்ள அரசியல் நரிகளின் கருத்துக்களுக்கு புத்திசாலிகளான சிங்கள பெரும்பான்மையின மக்கள் ஏமாறமாட்டார்கள். அஸாத் சாலி போன்ற அரசியல்வாதிகள் சிங்கள - முஸ்லிம் சமூகத்திற்கிடையில் இனவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள். இவ்வாறான செயற்பாடு ஒருபோதும் வெற்றி பெறாது என பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற விடயத்தில் அரசியல் தலையீடுகள் ஏதும் இல்லாமல் சுகாதார தரப்பினரால் சிறந்த தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினரின் தீர்மானத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் முரண்பட்டுக் கொள்வது பயனற்றது.

அஸாத் சாலி போன்றோர் அரசியல் சுயதேவைக்காக சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்த முனைகிறார்கள்.

பல வழிமுறைகளில் பலம் கொண்டு செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினை தோற்கடித்து பிரிவினைவாதம் முடிவுக்கு கொண்டு வந்தது. நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கும், தனி நபர்களுக்கும், அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் விடுதலைப் புலிகளின் நிலைமையை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது.

கடந்த அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பினையும் திட்டமிட்டு பலவீனப்படுத்தியது. நல்லாட்சியின் பலவீனம் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுடன் வெளிப்பட்டது. நல்லாட்சியில் அதிகாரம் செலுத்தியவர்கள் இன்று எதிர்க்கட்சியாக செயற்படுகிறார்கள். இவர்கள் தற்போது அரசியலுக்கு ஏதோ புதிதாக வந்துள்ளமை போன்று கருத்துரைக்கிறார்கள்.

சிங்கம் போன்று வேடமிட்டுள்ள நரிகளின் கருத்துக்களுக்கு சிங்கள பெரும்பான்மையினை மக்கள் ஏமாற்றமடையமாட்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தை அறிந்தே நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்கள்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எவ்வித பாதிப்பையும் அரசாங்கத்தில் ஏற்படுத்தாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad