போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபியை பார்த்து ஏன் அச்சமடைகின்றீர்கள்? : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபியை பார்த்து ஏன் அச்சமடைகின்றீர்கள்? : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கேள்வி

(நா.தனுஜா)

ஆயுதங்களையும் படைகளையும் விட மக்களின் இழப்பும் வலியும் வேதனையும் கண்ணீரும் மிகவும் பலம் வாய்ந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பதன் காரணத்தினாலா யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நேற்று இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டது. 

அதனைக் கண்டித்து யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினாலும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், அதில் மேலும் கூறியிருப்பதாவது, 'போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் ஒரு நினைவுத் தூபியினால் ஏன் அச்சமடைய வேண்டும்? மக்களின் இழப்புக்கள், நினைவுகள், துன்பம் மற்றும் கண்ணீர் என்பன ஏன் மிகுதியான பயத்தை ஏற்படுத்த வேண்டும்? ஆயுதங்களையும் படைகளையும் விட வலியும் வேதனையும் கண்ணீரும் மிகவும் பலம் வாய்ந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பதுதான் இதற்கான காரணமா?" என்று அந்தப் பதிவில் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி, தமது அன்பிற்குரியவர்களை மறக்க வேண்டும் என்று மக்களை வலிந்து நிர்ப்பந்திக்கும் பட்சத்தில், அது அன்பிற்குரியவர்களை மேலும் மேலும் நினைவு கூர்வதற்கே வழிவகுக்கும் என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment