லொத்தர் சீட்டின் இலக்கங்களை மாற்றி மோசடி செய்தவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

லொத்தர் சீட்டின் இலக்கங்களை மாற்றி மோசடி செய்தவர் கைது

லொத்தர் சீட்டின் இலக்கங்களை சூட்சுமமாக மாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவரை, இலக்கம் மாற்றப்பட்ட 36 லொத்தர் சீட்டுக்களுடன் விற்பனை முகவர் ஒருவர் மடக்கிப்பிடித்து கம்பளை பொலிஸ் நிலைய விசேட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். 

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

டயகம பிரதேச தோட்டம் ஒன்றில் வசித்து வரும் 34 வயதுடைய சந்தேகநபர், கம்பளை நகரில் அமைந்துள்ள லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்று ஜன உதானய என்ற லொத்தர் சீட்டிலுள்ள (ஜனவரம) என்ற விசேட இலக்கத்தின் ஒன்றை மாற்றி 1,000 ரூபாவை பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளார். 

ஏற்கனவே ஏமாற்று பேர்வழிகள் குறித்து தேசிய லொத்தர் சபை எச்சரித்து இருந்தமையால் இந்த நபர் மீது சந்தேகம் கொண்ட லொத்தர் சீட்டு விற்பனையாளர் தன்னிடம் பணம் இல்லையெனவும் தனியார் பஸ் நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள மற்றொரு லொத்தர் விற்பனையாளரிடம் கொடுத்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறி அனுப்பிவிட்டு மேற்படி சந்தேகநபர் தொடர்பில் குறிப்பிட்ட லொத்தர் சீட்டு விற்பனையாளரிடம் தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து அந்த நபர் தொடர்பில் சந்தேகநபரை மடக்கிப்பிடித்து கம்பளை மஹரயில் அமைந்துள்ள விசேட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். 

சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இவர் நீண்ட காலமாக கண்டி நுவரெலியா உட்பட நாட்டில் மேலும் பல நகரங்களுக்குச் சென்று இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment