தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் சதித்திட்டம், போராட்டம் வெடிக்கும் என்கிறார் கணேசலிங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 4, 2021

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் சதித்திட்டம், போராட்டம் வெடிக்கும் என்கிறார் கணேசலிங்கம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 25 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இடமளிக்க முடியாதென பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் தங்கவேல் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதாவது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாயும் 25 நாட்கள் வேலையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்குமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஸ்கெலியாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே தங்கவேல் கணேசலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாயும் 25 நாட்கள் வேலையும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்.

அதனை வென்றெடுப்பதற்காக ஆயிரம் ரூபாய் இயக்கம் உட்பட பல அமைப்புகளும் எம்முடன் கைகோர்த்துள்ளன. இதுவரை 20 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் அவசியம் என்ற யோசனை 2014 இல் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டன. இதற்கு கம்பனிகள் உடன்படவில்லை. இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வெறும் 20 ரூபாயே சம்பள உயர்வாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.

உற்பத்தி கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு,தேயிலை விலைக்கான கொடுப்பனவு போன்றன கம்பனிகளுக்கு சாதகமாக உள்ளன. எனவே, அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் அவசியம் என்றே அன்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கம்பனிகள் முன்வைத்துள்ள புதிய யோசனையில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளன. தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவாக 25 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதன்படி தற்போது 750 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் 775 ரூபாயை பெறும் நிலை உருவாகும்.

அப்படியானால் வெறும் 25 ரூபாயை மட்டுமே சம்பள உயர்வாக பெற்றுக்கொடுப்பதற்கான மோசடிகள் இடம்பெறுகின்றன. இதற்கு உடன்படமுடியாது. தொழிலாளர்களின் கோரிக்கை உரிய வகையில் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment