யார் எதிர்த்தாலும் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படும் - எதிர்க்கட்சியினர் தற்போது தேசப்பற்றுள்ளவர்கள் போல பேசுகிறார்கள் : அமைச்சர் நிமல் லன்சா - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

யார் எதிர்த்தாலும் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படும் - எதிர்க்கட்சியினர் தற்போது தேசப்பற்றுள்ளவர்கள் போல பேசுகிறார்கள் : அமைச்சர் நிமல் லன்சா

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு யார் எதிர்ப்பை தெரிவித்தாலும் அதனை வழங்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. 35 வருட காலத்துக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக கிழக்கு முனையத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய வளங்களை விற்று வாழ வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம் என கிராம வீதி அபிவிருத்தி அத்தியாவசிய சேவைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

கெரவலபிடிய பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய வளங்களை விற்று வாழ மாட்டோம் என்பதை அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் வழங்கப்படுகிறது.

இந்தியா மாத்திரமல்ல சீனா, ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் இலங்கையில் முதலீடுகளை முன்னெடுக்க முடியும். அதற்கான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் முதலீடுகள் அதிகரிக்கும் போது இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும். ஆகையால் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும். இந்திய இலங்கையின் அயல் நாடு என்பதால் அந்நாட்டை பகைத்துக் கொள்ள முடியாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இலங்கையின் தேசிய பொருளாதாரம் ஒப்பீட்டளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடிகளை வெற்றி கொண்டு பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும்.

இதன் முதற்கட்டமாகவே விமான நிலையங்கள் தற்போது திறப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சியினர் விமான நிலைய திறப்பு விடயத்தை சுட்டிக்காட்டி அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முனையத்தின் 51 சதவீதமான உரிமம் துறைமுக அதிகார சபையிடமே உள்ளது.

அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்போது எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் போது அமைதியாக இருந்தார்கள். தற்போது தேசப்பற்றுள்ளவர்கள் போல பேசுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 5 பிரதான மாபெரும் அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டன.

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட காலத்துக்கு சீன நிறுவனத்துக்கு வழங்கியது. இதனால் இலங்கைக்கு பெருமளவான இலாபம் கிடைக்கப் பெறவில்லை. 

ஆனால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு 35 வருட காலத்துக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகிறது. இதனால் பெருமளவில் வருமானம் கிடைக்கப் பெறும். ஆகவே எவர் எதிர்த்தாலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை என்றார்.

No comments:

Post a Comment