மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிமல் லன்சா - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிமல் லன்சா

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகியவற்றை மாகாண சபை ஊடாக பெற முடியும். மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய நிபுணத்துவ குழுவை நியமிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம வீதி மற்றும் அடிப்படை வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

அத்தனகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபை திருத்தம் கொண்டு வரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தலும் பிற்போடப்பட்டுள்ளது. எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபையை நிர்வகிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகள் மக்கள் பிரதிநிதிகளிடமே தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் இன்றி அதிகாரிகளால் மாத்திரம் அனைத்தையும் செய்ய முடியாது. அதிகாரிகள் மக்களுடன் இணைவது குறைவு. மக்கள் பிரதிநிதிகள்தான் மக்களுடன் எப்போதும் தொடர்பிலிருப்பர். எனவேதான் மாகாண சபைத் தேர்தல் நாட்டுக்கு அவசியம்.

பாராளுமன்றம் கூடும்போது, மாகாண சபைத்  தேர்தல் முறை, திருத்தம், தேர்தல் முறையில் உள்ள குறைபாடு குறித்து கலந்துரையாடி, இது தொடர்பாக குழுவொன்று நியமித்து மிக விரைவில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad