நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதிலிருந்து இதுவரை ஒருநாள் கூட சுங்கத் திணைக்களம் மூடப்படவில்லை - சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதிலிருந்து இதுவரை ஒருநாள் கூட சுங்கத் திணைக்களம் மூடப்படவில்லை - சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

(நா.தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலிருந்து தற்போதுவரை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கூட, சுங்கத் திணைக்களத்தின் சேவைகள் ஒருபோதும் இடைநிறுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்தும் வெளிப்படைத் தன்மையுடனான சிறந்த சேவையை நாட்டிற்கு வழங்கி வருவதாகவும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.வி. ரவிப்பிரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுங்கத் தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுங்கத் திணைக்களத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது ஏனைய வருடங்களை விடவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இம்முறை சர்வதேச சுங்கத் தின நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம். கடந்த வருடத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்ட அதேவேளை, அது எமக்குப் பல பாடங்களையும் கற்றுத் தந்திருக்கிறது. 

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடுகளுக்கு இடையிலான பயணங்கள் இடைநிறுத்தப்பட்ட போதிலும் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளைப் பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்தோம்.

மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடனான பாதுகாப்பான சுங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். 

அதுமாத்திரமன்றி தொற்று நோய் பரவலில் இருந்து சுங்கத் திணைக்களத்தின் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான அவசியமான சுகாதார நடைமுறைகளும் அமுல்படுத்தப்பட்டன. கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலிருந்து இதுவரை ஒருநாள் கூட சுங்கத் திணைக்களம் மூடப்படவில்லை என்பதை எம்மால் பெருமையுடன் கூற முடியும்.

அதேபோன்று போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளைக் கண்டறிவதற்கும் அவற்றை முறியடிப்பதற்கும் விசேட செயற்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றின் ஊடாக சுங்கத் திணைக்களம் தொடர்ந்தும் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததும் சிறப்பானதுமான சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது சுங்கத் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளிலும் அர்ப்பணிப்புடன் கூடிய சிறப்பான பணிகளை முன்னெடுத்த அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment