மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 20, 2021

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு

மேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். 

சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளை பெற்றுக் கொண்ட பின்னர் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் சுட்டிக்காட்டினார். 

மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படக் கூடிய பாடசாலைகள் தொடர்பில் அதிபர்கள், பிரதேச சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கோட்ட, வலயக்கல்வி பணிப்பாளர்கள் இணைந்து தீர்மானங்களை எடுத்து எதிர்வரும் பெப்ரவரி 03ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்க வேண்டுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பது குறித்தும் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் சுகாதார நிலைமைகள் குறித்தும் விசேட கலந்துரையாடல் கல்வி அமைச்சில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் Zoom செயலி மூலம் பங்குப்பற்றியதுடன், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கல்வி பொது சாதாரணத்தரப் பரீட்சையை நடத்துவதற்கான தினங்கள் ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டுள்ளன. மார்ச் முதலாம் திகதிமுதல் தொடர்ச்சியாக 12நாட்களுக்கு இந்தப் பரீட்சைகள் நடைபெறும்.

மேல் மாகாணத்தில் சாதாரணதரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றும் 907 பாடசாலைகள் உள்ளன. 79 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். எதிர்வரும் 25ஆம் திகதி முதல் குறித்த மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துவர சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படக் கூடிய பாடசாலைகள் தொடர்பில் அதிபர்கள், சுகாதார பரிசோதகர்கள், கோட்ட மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஆகியோர் இணைந்து தீர்மானங்களை எடுத்து எதிர்வரும் பெப்ரவரி 03ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும்.

கல்வி அமைச்சின் செயலாளரால் இச் சிபாரிசுகள் சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெற்று பின்னர் பெப்ரவரி 15ஆம் திகதியாகும்போது மேல் மாகாணத்தில் எந்த எந்த பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமென அறிவிக்கப்படும் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad