குருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் : பின்னர் நடந்ததென்ன..? - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

குருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் : பின்னர் நடந்ததென்ன..?

முல்லைத்தீவு தண்ணி முறிப்பு குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு பணிகள் இடம்பெறும் இடத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்றையதினம் விஜயம் செய்து நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இன்று காலை (27.01.2021) குறித்த பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரை அங்கு காவல் கடமையில் நின்ற இராணுவத்தினர் உள்ளே செல்லவிடாது தடுத்ததோடு, தமது மேலதிகாரியின் உத்தரவுப்படி யாரும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என இராணுவ முகாமின் இராணுவ மேலதிகாரி பணித்துள்ளதாக தெரிவித்து தடை விதித்தனர்.

அவ்விடத்திலிருந்து தொலைபேசி வாயிலாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை அழைத்த பாராளுமன்ற உறுப்பினர் விடயம் குறித்து தெரியப்படுத்தியதை தொடர்ந்து, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும் தொலைபேசியூடாக சாள்ஸ் நிர்மலநாதனுடன் கலந்துரையாடியதன் பின்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பங்குபற்றலுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகை தந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன இலக்கங்களையும் காவல் கடமையில் இருந்த இராணுவத்தினர் பதிந்ததோடு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்களையும் பதிந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad