பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை ஆரம்பித்து வைக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட மற்றுமொரு சேவையான இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (e-Land Registry system) கொழும்பில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேற்படி புதிய முறைமைய ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது உரை நிகழ்த்திய அமைச்சர் சமல் ராஜபக்ஷ, நாட்டு மக்கள் காணி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர்களின் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (e-Land Registry system) அமையுமென தெரிவித்தார்.

அத்துடன் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க எப்போதும் நாம் முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளரும், பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உரையாற்றுகையில் இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (e-Land Registry system) ஆனது, நாட்டு மக்களின் காணி உரிமையில் நம்பகத்தன்மையை உறுதி செய்வதுடன் எதிர்காலத்தில், காணி தொடர்பான சர்ச்சைகளுக்கான வாய்ப்புகள் குறைய இது வழிவகுக்கும்' என தெரிவித்தார்.

தற்போது மூன்று அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இந்த ஆண்டு இறுதிக்குள் 45 நில பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறைமையை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

'சுபிட்சத்தின் நோக்கு' எனும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடணத்தை மேற்கோள் காட்டிய அவர், இவ்வகையான திட்டம் தொழில்நுட்பம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சேவைகளின் அடிப்படையில் சமூகத்திற்கு உதவுகிறது என்றும், எனவே, இந்த திட்டத்தை வெற்றிபெற அனைவரின் ஆதரவையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்ட செயலாளர், அமைச்சின் மேலதிகசெயலாளர்கள், ஜனாதிபதி செயலணி அதிகாரிகள், பதிவாளர் நாயகம், திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment