இலங்கை தமிழருக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வுடன் நிரந்தர தீர்வு, இந்தியா உறுதியாக உள்ளது என்கிறார் ஜெய்சங்கர் - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

இலங்கை தமிழருக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வுடன் நிரந்தர தீர்வு, இந்தியா உறுதியாக உள்ளது என்கிறார் ஜெய்சங்கர்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்றை இந்தியா எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

அதற்கிணங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்றுக் காலை 9 மணி யளவில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினை இந்தியா எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது வரவேற்பைத் தெரிவித்ததாகவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

அத்துடன் வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைப்பது தொடர்பான விடயங்களையும் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு வருவதில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறி உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களின் சொந்த இடங்களில் தற்போது படையினர் தங்கியுள்ளதால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம், வீடமைப்பு போன்ற நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாரித்துள்ள ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையின் பிரதியையும் அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்துள்ளனர். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad