கியூபாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அமெரிக்கா மீண்டும் அறிவித்தது - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

கியூபாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அமெரிக்கா மீண்டும் அறிவித்தது

வென்சுவேலாவுக்கு ஆதரவு அளிப்பதைக் காரணமாகக் கூறி தீவிரவாதத்திற்கு அனுசரணை அளிக்கும் நாடுகள் பட்டியலில் கியூபாவை அமெரிக்கா மீண்டும் இணைத்துள்ளது.

ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறுவதற்கு ஒருசில நாட்கள் இருக்கும் நிலையிலேயே டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கியூபாவில் கடந்த 1959 இல் புரட்சி மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்தார். அதைத்தொடர்ந்து 1960 இல் அமெரிக்கா, கியூபா இடையிலான தூதரக உறவு முறிந்தது. 

அத்துடன் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக அறிவித்த அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வந்தது.

பயங்கரவாத ஆதரவாளராக அறிவித்ததன் மூலம் கியூபாவுடன் குறிப்பிட்ட வர்த்தகத்தில் ஈடுபடும் தனி நபர்களுக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா அபராதம் விதித்தது. 

கியூபாவுக்கான வெளிநாட்டு உதவிகளை அமெரிக்கா கட்டுப்படுத்தியது. ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனையை தடை செய்தது.‌ 

இப்படி இரு நாடுகளுக்கும் இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.

வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருக்கும் ஜோ பைடன், அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தச் செயலை அரசியல் சந்தர்ப்பவாதம் என்று கியூபா கூறியுள்ளது. எனினும் கியூபாவை இந்தப் பட்டியலில் சேர்ப்பதற்கு மீளாய்வு ஒன்றுக்கு உட்படுத்தப்பட வேண்டி இருப்பதோடு அதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கரீபியன் தீவு நாடு தீவிரவாதத்திற்கு அனுசரணை அளிக்கும் பட்டியலில் இருந்து 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நீக்கப்பட்டது. எனினும் அந்த நாட்டின் மீது டிரம்ப் நிர்வாகம் கடும்போக்கு நிலைப்பாட்டை பேணி வந்தது.

அமெரிக்கா அங்கீகரிக்காத வெனிசுவேல தலைவர் நிகொலஸ் மடுரோவுக்கு கியூபா ஆதரவு அளிப்பதை இந்த முடிவுக்குக் காரணமாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே குடும்பப் பயணங்கள் மற்றும் பணப் பரிமாற்றங்களுக்கு அனுமதி அளிக்க பைடன் திட்டமிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பராக் ஒபாமா அரசின் காலத்தில் கியூபாவுடன் அமெரிக்கா உறவை மீண்டும் ஆரம்பித்தது. கியூபாவை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்ததாக ஒபாமா அப்போது கூறி இருந்தார்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த கியூபா மீது அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.

இந்நிலையில் தீவிரவாதத்திற்கு அனுசணை அளிக்கும் நாடுகள் பட்டியலில் ஈரான் மற்றும் வட கொரியாவுடன் கியூபா மீண்டும் இணைகிறது. இது அந்த நாட்டின் வெளிநாட்டு முதலீடுகளில் தாக்கம் செலுத்தக்கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad